வலி.வடக்கில் மக்கள் மீள குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னர் இருந்த பல இந்து ஆலயங்கள் இடித்தழிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்து உள்ளனர்.
கடந்த 26 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி வைத்திருந்த பகுதிகளில் சனிக்கிழமை 201 ஏக்கர் நிலப்பரப்பில் மக்கள் மீள குடியமர அனுமதித்தனர்.
அதனை அடுத்து அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் விடுவிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்வையிட்டு வருகின்றார்கள்.
அதன் போது தமது பரம்பரை ஆலயங்கள் குல தெய்வ ஆலயங்களை மக்கள் தேடிய போது பல ஆலயங்கள் இருந்த இடம் தெரியாது இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டு உள்ளன.
காங்கேசன்துறை வீதியில் தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் இருந்த இடத்திற்கு எதிரே அருகருகே இருந்த மூன்று கோவில்களில் பிள்ளையார் கோவில் அம்மன் கோவில் என்பன முற்றாக இடித்தழிக்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கு அருகில் இருந்த வீரபத்திரர் கோவில் பகுதிகளவில் சேதமாக்கப்பட்டு உள்ளன.
அதேபோன்று குரும்பசிட்டி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி அம்மன் ஆலயம் விடுவிக்கப்படாத பகுதியில் இராணுவ முகாமினுள் காணப்படுகின்றது. குறித்த ஆலயம் இருக்கின்றதா? அதுவும் இடித்தழிக்கப்பட்டு விட்டனவா? என்பதனை அறிய மக்கள் இராணுவத்தினரை கேட்ட போதிலும் இராணுவ தரப்பால் அது தொடர்பில் ஏதேனும் கூறப்படவில்லை.
குறித்த காசி அம்மன் ஆலயத்தின் வீதியோர பாதையில் ஆலய உண்டியல் வைக்கப்பட்டு அம்மன் திருவுருவ சிலை ஒன்றும் உண்டியல் மேல் வைக்கப்பட்டு இருந்தது. அதன் மேல் இருந்த அம்மன் திருவுருவ சிலை முற்றாக சேதமாக்கப்பட்ட போதிலும் அம்மனின் முகம் சேதமடையாமல் இருந்தமையால் அதனை கல் ஒன்றின் மீது வைத்து மக்கள் வழிபடுகின்றார்கள்.