யாழ்ப்பாணத்தில் இதுவரை நான்கு ஆலயங்களில் சுமார் ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட ஆட்டுக் கடாக்கள் வேள்வி என்ற பெயரில் வெட்டிச் சரிக்கப்பட்டன.இந்தச் செயலை உடனடியாக நிறுத்துமாறு இந்துமத அமைப்புக்கள் கோரி வருகின்றபோதும் சில ஆலயங்களின் நிர்வாக சபையினர் அதனைக் கேட்க மறுத்து தொடர்ந்து இந்தக் கொடும் செயலை ஈனச் செயலை மேற்கொண்டு வருகின்றனர். பிரான்பற்று, கவுணாவத்தை, நவாலி, தெல்லிப்பழை துர்க்காபுரம் 8 ஆம் கட்டை வைரவர் ஆலயங்களில் ஆட்டுக்கடாக்களை வெட்டிச் சரிக்கும் நிகழ்வு அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளது. இதில் சுமார் ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட கடாக்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன.
இது குறித்து இந்து கலாசார அமைச்சின் அதிகாரி ஒருவர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.கடந்த காலங்களில் சுமார் 14 ஆலயங்களில் இடம்பெற்று வந்த கடாக்கள் வெட்டிச் சரிக்கும் நிகழ்வு படிப்படியாகக் கைவிடப்பட்டுத் தற்போது 5 ஆலயங்களில் மட்டுமே இடம்பெறுவதாகவும் இவற்றையும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
கடவுளின் பெயரால் இப்படி உயிர்க் கொலை இடம்பெறுவதை ஏற்க முடியாது எனவும் இது ஒரு சிலரின் விருப்பத்துக்காகவும் ஆதாயத்துக்காகவும் முன்னெடுக்கப்படுவதாக வும் இந்து அமைப்புக்கள் பலவும் கண்டனம் வெளியிட்டுள்ளன.
எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைக்கு எதிராகக் குரலெழுப்பி அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவை கோரிக்கை விடுத்துள்ளன.ஆலயங்களில் நடைபெற்று வரும் இந்த கடாக்கள் வெட்டிச் சரிப்பை நிறுத்துமாறு கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு தரப்பினால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்ந்து உதாசீனம் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பிட்ட சில ஆலயங்களின் நிர்வாகிகள் இந்த கோரிக்கைகள் எதற்கும் செவி சாய்க்காமல் தமது ஆலயங்களில் இந்த மோசமான செயலை அரங்கேற்றி வருகின்றமை குறித்து பொதுமக்கள் தரப்பிலும் கடும் விசனம் வெளியிடப்படுகிறது.
இது ஒரு பக்திபூர்வமான நிகழ்வு அல்ல எனவும் இதனை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்துமத பீடங்கள் உடன் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது