தினமலர் சார்பில் ரஜினியின் ‛கபாலி’ படத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு இணையதளத்தை ‛கபாலி’ படத்தின் தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான கலைப்புலி எஸ்.தாணு, தினமலர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று துவக்கி வைத்தார்.
ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள படம் ‛கபாலி’. பாட்ஷா படத்திற்கு பிறகு மீண்டுமொரு கேங்ஸ்டர் கதையில் நடித்திருக்கிறார் ரஜினி. கபாலி படத்தின் கதை மலேசியாவை மையப்படுத்தி உருவாகியுள்ளதால் படத்தின் அனேக காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டன. ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தினேஷ், கலையரசன், தன்ஷிகா, கிஷோர், நாசர், மைம் கோபி உள்ளிட்டவர்களுடன் ஹாலிவுட் நடிகர் வின்ஸ்டனும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.
ரஜினியின் கபாலி படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ‛கபாலி’ சிறப்பு இணையதளம் ஒன்று தினமலர் இணையதளத்தில் பிரத்யேமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை கபாலி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இன்று(ஜூன் 25ம் தேதி) துவக்கி வைத்தார். மேலும் இன்று தாணுவிற்கு பிறந்தநாள் என்பதால், தன்னுடைய பிறந்தநாளில் இதை துவக்கி வைத்தது மகிழ்ச்சி என்று கூறினார்.
இந்த இணையதளத்தில், ‛கபாலி’ சம்பந்தப்பட்ட லேட்டஸ்ட் செய்திகள், பாடல்கள், டீசர், படக்குழுவினரின் பிரத்யே பேட்டி, போட்டோ கேலரி உள்ளிட்ட அத்தனை விஷயங்களும் இடம்பெற்றுள்ளது.