இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு எதிராக கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, காயமடைந்த முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்த்தன மற்றும் சிரியாணி விஜேவிக்ரம ஆகியோர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மத்திய வங்கியின் ஆளுநருக்கு பதவி நீடித்து வழங்கக் கூடாது மற்றும் வட் வரி அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டு எதிரணியினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே ரோஹித அபேகுணவர்த்தன எம்.பி காயமடைந்தார். கோட்டை பகுதியில் பொலிஸ் தடைகளை தள்ளிக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் முன்னால் செல்ல முற்படுகையில் பொலிஸ் தடுப்பு வேலி அவர் மீது விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, விமல் வீரவன்ச,வாசுதேவ நாணயகார, மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களென ஏராளமானோர் கலந்துகொண்டனர்.