தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் வளங்களை சூறையாட சிலர் முயற்சிப்பதாக வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தாம் கலந்து கொண்டிருந்ததாகவும், இதன்போது வடமாகாணத்துக்கு கிடைக்கப்பெறவுள்ள பொருளாதார மையம் தொடர்பில் சூழ்ச்சி ஒன்று இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய வடக்கு முதல்வர்,
‘கடந்த திங்கட் கிழமை மத்திய அமைச்சர் அவை அமைச்சர்களுடன் மற்றைய முதலமைச்சர்களுடன் ஜனாதிபதி முன்னிலையில் ஒரு கூட்டத்தில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது.
பல சவால்களை எதிர் கொண்டு முதல் நாளிரவு நான் கொழும்புக்கு தொடரூந்தில் சென்றேன்.
கூட்டத்திற்குச்சென்றதும் தான் தெரிந்தது வட மாகாணம் சம்பந்தமாக அங்கு ஒரு சதி நடைபெற இருந்தது என்பது.
நான் சென்றதால் சதி அம்பலமானது.
வடமாகாணம் நோக்கி எமக்கு பொருளாதார மையமொன்றைத் தருவது போல் இது காலம்வரை பெரிதாகக் கூறி வந்த கிராமிய பொருளாதார அமைச்சர் தன் உள்ளக் கிடக்கையை அன்று வெளியிட்டுவிட்டார்.
நான் அன்று வருகை தர இருந்ததை அவர் எதிர் பார்க்கவில்லை.
அதாவது வடமாகாண மக்களால் பொருளாதார மையத்தை எங்கு நிறுவலாம் என்பதில் ஸ்திரமான நிலைப்பாடு ஒன்று இல்லாததால் அதனை மதவாச்சியில் அமைக்க வேண்டும் என்று கேட்டு, நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் ‘வேறு விடயங்கள்’ என்று தலைப்பின் கீழ் தமது கருத்தைத் தெரிவித்தார்.
இதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் ஒத்துப் போனார் போல் தெரிந்தது.
நான் விளக்கமளிக்கையில் பொருளாதார மையம் வவுனியாவில் நிறுவுவது சம்பந்தமாக எமக்கு அறிவிக்கப்பட்டதும் ஐந்து இடங்களை அடையாளம் கண்டு, அவற்றில் எது சிறந்தது என்று நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்துக் கேட்டோம்.
அவர்கள் தாண்டிக்குளத்திலும் மற்றைய மூன்று இடங்களிலும் அமைப்பது கூடாது என்றும் ஓமந்தையில் அமைப்பதே சிறந்தது என்றும் கருத்து வெளியிட்டார்கள்.
தாண்டிக்குளத்தில் அமைத்தால் எமது விவசாய கல்லூரியும் விவசாயப் பண்ணையும் பாதிக்கப்படும் என்று கூறினார்கள்.
வேறு பல காரணங்களையும் முன்வைத்தார்கள்.
எனவே நான் ஓமந்தையில் நிறுவுமாறு அமைச்சரிடம் கேட்டிருந்தேன்.
அதன் பின் நான் பங்குபற்றாமல் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ரிஷாட் பதியுதீன், தாண்டிக் குளத்தில் நிறுவ வேண்டும் என்று கூறி முடிவு எடுக்க வைத்தார்.
இந்தப் பிரச்சினையைத ஆரம்பித்து வைத்தவரே அவர் தான்.
இது பிரச்சினையாகியதுடன், பொருளாதார மையத்தை இழக்கக் கூடாதென்ற காரணத்தினால் நான் அமைச்சர் ஹரிசனைப் போய் நேரில் சந்தித்தேன்.
அவர் தாண்டிக்குளமும், ஓமந்தையும் தொலைவில் போய்விட்டன.
வவுனியா நகரத்தினுள் ஒரு இடம் தரவேண்டும் என்று கேட்டார்.
வடக்கு நோக்கி அமைதலே உசிதம் இது வடக்குக்குக் கிடைக்க வேண்டிய மையம்.
எனவே மாங்குளத்தில் அமைப்பதே சிறந்தது.
அப்படி இல்லை என்றால் வவுனியாவின் வடக்கில் இருக்கும் ஓமந்தையே சிறந்தது என்று கூறிப்பார்த்தேன்.
அமைச்சர் ஒரேயடியாக நகரத்தினுள் இடந் தாருங்கள் என்று விடாப்பிடியாகக் கேட்டார்.
எனவே ஒரு வாரத்தினுள் நான் அவர் கேட்டவாறு A9 பாதையில் CTB பஸ்நிலையத்திற்குப்பின்புறமாக மதவுவைத்த குளத்தில் ஐந்து ஏக்கர் காணிகளை அடையாளங் காட்டினேன்.
அது ரிஷாட் பதியுதீன் அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் கோரிக்கைக்கு அமைய ஒரு கம்பனிக்குக் குத்தகைக்கு விடப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
நான் விசாரித்துப் பார்த்து அப்படியல்ல, குத்தகைக்கு எடுப்பதாக இருந்த கம்பனி கூறப்பட்ட பூர்வாங்க நடவடிக்கைகளில் இறங்காமையால் இரண்டு வருடங்கள் சென்ற நிலையில் காணியைத் திரும்பப் பெறுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை அவருக்கு எடுத்துரைத்தேன்.
இது பற்றிய காணி ஆணையாளரின் கடிதமும் கையளிக்கப்பட்டது. அப்படியிருந்தும் அன்றுகாலை அமைச்சர் கூட்டத்திற்குமுன்னர், அவர் என்னைச் சந்தித்துஅவ்விடம் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
எந்தவித குத்தகையும் கைச்சாத்திடப்படவில்லை என்று கூறினேன். அதை அவர் ஏற்கவில்லை. பின்னர் கூட்டத்தில் அவரின் கூற்றின் போது பதில் அளிக்கையில் எம்மைப் பயப்படுத்திக் காரியம் சாதிக்கப் பார்க்கின்றார் அமைச்சர் என்று கூறி வடமாகாணத்திற்கு எப்படி என்றாலும் பொருளாதாரமையத்தைத் தரவேண்டும் என்று கூறி நிபுணர்கள் கூடாது என்று கூறியிருப்பினும் கட்டாயத்தின் பேரில் வேண்டுமானால் தாண்டிக் குளத்தில் அமையுங்கள் என்றேன்.
முழு அமைச்சர் குழாமிற்குங் கேட்கும் படியாக பொருளாதார மையம் வடமாகாணத்திற்கு அவசியம் என்பதை எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றேன்.
மத்திய அமைச்சர் மதவாச்சிக்குக் கொண்டு போக ஆவணம் சமர்ப்பித்துள்ளார் என்பதை அமைச்சர் ரிஷாட் அறிந்து கூட மதவாச்சிக்கு எடுத்துச் செல்லும் திரு.ஹரிசனை விமர்சிக்காமல் தாண்டிக்குளத்திற்கு எடுத்துச் செல்ல முதலமைச்சர் இணங்கியுள்ளார் என்று ஜனாதிபதிக்குக் கூறினார்.
தாண்டிக்குளத்தில் அமைக்கத் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.
ஜனாதிபதியோ சிரித்துக் கொண்டு இல்லை! இதை பிரதம மந்திரியுடன் பேசி சுமூகமான ஒரு முடிவுக்கு வாருங்கள் என்றார்.
அமைச்சர் ரிஷாட்டுக்கு தாண்டிக்குளத்தில் அமைப்பதால் எமக்கு ஏற்படப் போகும் பாதிப்புக்கள் பெரிதாகப்படவில்லை.
விவசாயக்கல்லூரி, விவசாய நிலம், விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கள் பெரிதாகப்படவில்லை.
ஆகவே தமிழ் மக்களுக்குவர வேண்டிய, வரக்கூடிய பல திட்ட அமைவுகளையும் சூறையாட நடவடிக்கைகள் திரைமறைவுகளில் நடக்கின்றன’ என்று அவர் கூறினார்.