திருகோணமலை- குச்சவௌி பொலிஸாரினால் இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஸ்வானந்த பெர்ணாண்டோ உத்தரவிட்டார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கேகாலை பகுதியைச்சேர்ந்த ஜே.ஏ.துஸ்வந்த கயான் ஜயவீர (46 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கேகாலை பகுதியைச் சேர்ந்த இச்சந்தேக நபர் நிலாவௌி பகுதியிலுள்ள பெண்ணொருவருடன் ஹோட்டலொன்றில் தங்கியிருந்த வேளை சுற்றுலா வந்த கேகாலை பகுதியைச்சேர்ந்தவர்கள் இவர் பற்றிய விடயங்களை தெரியப்படுத்திய போது அங்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டு சோதனையிட்டபோது அவரிடமிருந்து இரண்டு அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதில் ஒரு அடையாள அட்டையில் 1970 ஆண்டு பிறந்துள்ளதாகவும் மற்றைய அடையாள அட்டையில் 1978ம் ஆண்டு பிறந்தவர் எனவும் பெயர்களில் சிறியளவில் மாற்றங்கள் காணப்படுவதாகவும் குச்சவௌி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த நபர் கேகாலை-மற்றும் கண்டி நீதிமன்றங்களில் பண மோசடி -வாகன மோசடிகள் தொடர்பில் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் 16திருமணங்களில் 36 பிள்ளைகள் உள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் மக்கள் அறிமுகமில்லாத இடங்களுக்குச்சென்று திருமணம் முடித்து அவர்களுடைய உறவினர்களிடம் வேலை வாய்ப்புக்களை பெற்று தருவதாக கூறி பணத்தினை மோசடி செய்துள்ளதாகவும் வழக்குகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.