கொத்து குண்டு விவகாரம்- ராஜித்த கூறிய பதில் இதுதான்!

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக வௌியான குற்றச்சாட்டுக்கள் குறித்து அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பதிலளித்துள்ளார்.

குறித்த வியடம் தொடர்பில் பல்வேறு செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வௌியான போதும், அது கொத்து குண்டுகளா என்பதோ, இலங்கை இராணுவம் அதனை பயன்படுத்தியதா என்பதோ தெரியவரவில்லை என அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் பேசிய அவர், இந்த அறிக்கை குறித்து ஆரம்ப கட்டமாக ஆராய்ந்து வருவதாக கூறினார்.

மேலும், முதலில் ஆராய வேண்டியது அது இலங்கையில் கண்டெடுக்கப்பட்டதா, அவ்வாறு இலங்கையில் கண்டெடுக்கப்பட்டதாயின் அது இராணுவத்துக்கா அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கா சொந்தமானது என்பதே என, ராஜித்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதுபோன்ற கொத்து குண்டுகள் பயன்படுத்தியமைக்கு சாட்சிகள் இருப்பின் அதனை ஏன் அந்த காலத்திலேயே முன்வைக்கவில்லை எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த இந்த ஆறு வருட காலப்பகுதிக்குள் அங்கு மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், இதுபோன்ற விடயம் இருப்பின் அப்போதே முன்வைத்திருக்கலாம் எனவும் ராஜித்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இதுபோன்று ஊடகங்களுக்கோ பிற தரப்பினருக்கோ வௌியிடுவது ஒழுக்கத்துக்கு மாறானது என இதன்போது, கருத்து வௌியிட்ட அமைச்சர் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts