Ad Widget

மேடை போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பது மட்டும் உதவியாக அமையாது!

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் தலைவியர்கள் சமூக அரசியல் துறைகளில் செயலாண்மை மிக்கவர்களாக விளங்க வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை யாழ். நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களாக இருந்தால் என்ன சிங்களவர்களாக இருந்தால் என்ன பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கப் பெற வேண்டும்.

பெண்கள் பிரச்சினைகள் தொடர்பாக, விசேடமாக போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், கணவனை இழந்த மற்றும் பிள்ளைகளைக் கொண்ட விதவைத் தாய்மார்கள் ஆகியோரின் புனர்வாழ்வு தொடர்பாக வடமாகாண சபை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்துவருவதுடன் அவர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது தொடர்பாக விசேட கவனம் செலுத்திவருகின்றது.

சலாவப் பகுதி இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு விரைந்து உதவிகளை நல்க வந்திருப்பது பாராட்டப்படக்கூடியது. இது அரசின் கடமையுமாகும்.

எதிர்பாராத இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்படுகின்ற மக்களுக்கான உதவிகள் விரைந்து வழங்கப்பட வேண்டும். ஆனால் வட பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட இலட்சோப இலட்சம் மக்கள் உறவுகளை இழந்து, உடல் அங்கங்களை இழந்து, வீடுகளை இழந்து, வாசல்களை இழந்து, பிள்ளைகளை இழந்து, இன்னல்படுகின்றார்கள்.

ஆகக் குறைந்தது அவர்களின் மிக மிக அடிப்படைத் தேவையாக கருதப்படக்கூடிய உணவுத் தேவைக்கு கூட எந்தவொரு உதவியையும் அரசு வழங்காது தாமதித்து வருவதை நாம் ஏற்க முடியாது.

ஒற்றுமையாக இருப்போம் எம்முடன் இணைந்து செயற்படுங்கள் என நேசக்கரம் நீட்டுகின்றார்கள். நாங்கள் மறுக்கவில்லை. நீங்கள் தமிழ் மக்களை நோக்கி அவர்களின் குறைகளைக் களையும் நோக்கில் ஓர் அடி முன்னோக்கி வாருங்கள் நாம் பத்து அடி உங்களை நோக்கி வருகின்றோம் எனத் திரும்பத் திரும்ப கூறி வருகின்றோம்.

நடந்தவற்றை மறப்போம் புதிய நல்லுறவை சிருஷ்டிப்போம் என்கின்றார்கள். எப்படி மறப்பது? மறக்கக் கூடிய விதத்திலா தமிழர்களுடன் உறவுகள் பேணப்பட்டு வந்துள்ளன? மேடை போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பது மட்டும் உதவியாக அமைந்துவிடாது. நீங்கள் கூறுகின்ற விடயங்களுக்கு செயல் வடிவம் கொடுங்கள் என்று அரசாங்கத்தை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

சகல வசதிகளுடனும் இருந்த மக்களில் எத்தனை ஆயிரம் பேர் அகதி முகாம்களில் ஏதிலிகளாக இன்று கிடக்கின்றார்கள் என்பதை நாம் கருத்தில் எடுக்க வேண்டும். பொது மக்களின் காணிகளை விடுகின்றோம் விடுகின்றோம் என்கின்றார்கள். எமது மக்களும் இலவு காத்த கிளியாக தவங்கிடக்கின்றார்கள்.

இது எப்போது நிறைவேறப் போகிறது என்று எமக்கும் தெரியாது அரசுக்கும் தெரியாது. தற்போதைய அரசிற்கு ஒரு அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. தமிழ் மக்களின் இப் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் இந் நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்குவதற்கான திட்டங்களை விரைந்து செயற்படுத்துவார்களேயாயின் அவர்கள் அழியாத் தலைவர்களாக எம்மவர்களாலும் ஏன் இலங்கையிலுள்ள ஒட்டு மொத்த சமூகங்களாலும் போற்றி கௌரவிக்கப்படுவதுடன் இவர்களின் பெயர்கள் எமது முன்னைய உலகப் பெருந் தலைவர்களின் பெயர் வரிசைகளில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை.

மாறாக எமது பணிவான கோரிக்கைகளை ஏற்க மறுத்து தான்தோன்றித்தனமாக இறுமாப்புடன் செயற்பட்ட அரசியல் தலைவர்களுக்கு ஏற்பட்ட கதி என்ன என்பதனையும் அவர்கள் நன்கு அறிவார்கள். தம்மை உலகப் பெருந்தலைவர்கள் என பிதற்றிக் கொண்ட பலர் இன்று இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டுள்ளமை இந்த அரசுக்கு ஒரு பாடமாக அமையட்டும் என்றார்.

Related Posts