இரண்டு கணவர்களிடமிருந்தும் தாபரிப்புப் பணம் பெற்று வந்த பெண்ணை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால், இன்று புதன்கிழமை (22) அடையாளம் கண்டுகொண்டார்.
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது கணவரிடமிருந்து தாபரிப்புப் பணம் பெறுவதற்காக நீதிமன்றத்துக்கு வந்து, நீதவான் முன்னிலையில் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, பிறிதொரு வழக்கில் பிள்ளையை வளர்ப்பதற்கான தாபரிப்புப் பணத்தைச் செலுத்துவதற்காக நபர் ஒருவர், நீதிமன்றத்துக்கு வந்தார்.
அவரின் தாபரிப்புப் பணத்தைப் பெறுவதற்கும், முன்னர் தாபரிப்புப் பெற்ற அதே பெண்ணே வந்தார்.
இதனை அவதானித்த நீதவான், விவரத்தை வினாவியபோது, முதல் கணவனை பிரிந்து வாழ்வதால் அவரிடமிருந்து தாபரிப்புப் பணம் பெறுவதாகவும், இரண்டாவது கணவன் மூலம் தனக்கு பிள்ளை இருப்பதுடன் அவரையும் விட்டுப் பிரிந்து வாழ்வதால் பிள்ளையை வளர்ப்பதற்கான தாபரிப்புப் பணத்தைப் அவரிடமிருந்தும் பெறுவதாக அந்தப் பெண் கூறினார்.
இதனையடுத்து, முதல் நபரை அழைத்த நீதவான், சட்டத்தரணி ஒருவர் மூலம் மேலதிக சட்ட நடவடிக்கைகளை எடுக்க வழக்கு தாக்கல் செய்யுமாறு அறிவுரை கூறினார்.