எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (21) ‘வெரிகுட்’, ‘வெரிகுட்’ (மிக்க நன்று, மிக்க நன்று) என்று கூறியமையால், அவையிலிருந்து உறுப்பினர்கள் பெரும்பாலோனர் திகைத்து நின்றனர்.
நாடாளுமன்றம், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் 1 மணிக்கு கூடியது.
சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எழுந்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்தன, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான உதய கம்மன்பில தொடர்பில் விசேட பிரச்சினையொன்றை கிளப்பினார்.
சட்டதரணியான உதய கம்மன்பில, இந்த அரசாங்கத்தின் அநாவசியமான முறைகேடான செயற்பாடுகளை விமர்சித்தவர். அத்துடன், ஜெனீவாவுக்குச் சென்ற குழுவுக்கு தலைமை தாங்கினார் என்று கூறினார்.
தினேஷ் குணவர்தன எம்.பியின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த இரா.சம்பந்தன், ‘ஜெனீவா’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன், ‘ஜெனீவாவுக்குச் சென்றீர்களா? „வெரிகுட்…, „வெரிகுட்…’ என்று, ஒலிவாங்கி முடுக்கி விடப்படாத நிலையில் உரத்த சத்தத்தில் கூறிவிட்டார்.
இதன்போது அவையில் இருந்த ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களில் பலர், திகைத்துப் போய்விட்டனர். தினேஷ் எம்.பியும் திகைத்துப் போய்விட்டார். எனினும், தன்னை சுதாகரித்துக்கொண்ட தினேஷ் எம்.பி ‘எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, ஜெனீவாவுக்கு நீங்கள் செல்லும் இடம் வேறு, நாங்கள் செல்லும் இடம் வேறாகும். ஆனால், விமானத்தில் சென்று ஒரே இடத்தில் தான் இறங்க வேண்டும்’ என்றார்.
எனினும், குறுக்கிட்ட இரா.சம்பந்தன், ‘உங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஜெனீவாவுக்குச் சென்றவர் தானே’ எனக் கூறியமர்ந்தார். இவ்விரு சந்தர்ப்பங்களிலும், இரா.சம்பந்தனின் ஒலிவாங்கி முடுக்கிவிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.