மாணவர்களை கௌரவிக்க மறுத்த அதிபர், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியின் அதிபரின் செயற்பாட்டால், குறித்த கல்லூரில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, மாணவர்களின் பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில், மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி பாடசாலையில், கடந்த 2015ஆம் ஆண்டு தரம் 5இல் கல்விகற்ற 2 மாணவர்களும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இதனையடுத்து தரம் 6க்கான கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக, அவ்விருண்டு மாணர்வர்களும் பருத்தித்துறையிலுள்ள கல்லூரியொன்றுக்குச் சென்றுள்ளனர். இதற்கிடையில், புலமைப் பரிசிலில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் பாடசாலையின் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், கௌரவிப்பு வழங்கப்படவுள்ள மாணவர்களின் பட்டியலில், பாடசாலையை விட்டுச் சென்ற மாணவர்கள் இருவரது பெயர்களும் உள்ளடங்கப்படவில்லை என்று பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது.
தங்களது பிள்ளைகளுக்கு எதற்காக அழைப்பு விடுக்கப்படவில்லை என்று, அதிபரிடம் பெற்றோர் வினவியபோது, பாடசாலை மாறிச் சென்றதால் அவர்களுக்கு கௌரவிப்பு நடத்த முடியாது என்று அதிபர் கூறியுள்ளதாக அறிய முடிகின்றது.
இதனையடுத்து, 2 மாணவர்களின் பெற்றோர்களும் இவ்வாறு முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். இதன் பின்னர், இது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு மேற்படி மூவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் தி.கனகராஜ் தெரிவித்தார். மேற்படி இரு மாணவர்களும் புலமைப்பரிசில் பரீட்சையில் 176, 162 புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.