இருக்கின்ற கோவில்களில் வழிபாடு செய்வதற்கு மக்கள் இல்லாத நிலையில் புதிது புதிதாக கோவில்களை அமைக்க முயல்வது பயனற்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
துணைவி கலைவாணி சனசமூக நிலையத்தின் 31வது ஆண்டு விழாவும் அமரர் சி. சிதம்பரப்பிள்ளை ஞாபகார்த்த கலைவாணி கலையரங்கு திறப்புவிழாவும் நேற்றைய தினம் துணைவி, சங்கரத்தையில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்..
வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்து ஒரு வேளை சோற்றிற்கே அல்லலுற்ற மக்கள் தமது ஆரம்பக் கல்வியைக்கூட தொடர முடியாது மிகச் சிரமப்பட்டு வெளிநாடுகளுக்கு சென்று அங்கே வளமான வாழ்க்கையொன்றைப் பாடுபட்டு அமைத்து அவ்வாறு சம்பாதித்த பணத்தைத் தாம் பிறந்த மண்ணிற்குச் செலவு செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றார்களே அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
பல கிராமங்களில் இருந்து மக்கள் சமூகப்பணிகளுக்காக உதவி கேட்டு எமது அலுவலகத்தை நோக்கி தினமும் வருகின்றார்கள். கோவில்கள் அமைக்க, சனசமூக நிலையங்கள் அமைக்க, முன்பள்ளிகள் அமைக்க என பல்வேறு தேவைகளுக்காக பணம் கேட்டு வருகின்றார்கள்.
இவர்களில் பலர் எந்தவித உடல் உழைப்புமின்றி சொந்தப் பங்களிப்புகள் இன்றி அனைத்து செலவீனங்களுக்கான கொடுப்பனவுகளும் பிறரிடமிருந்து அல்லது அரசிடமிருந்து கிடைக்கப்பெற வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள்.
வேலி அருகே ஒரு சூலத்தை நட்டுவிட்டு புதிதாக கோவில் அமைக்க வேண்டும் அதற்கு முதலமைச்சர் தான் பணம் தரவேண்டும் என தினமும் வந்து நச்சரிக்கின்றனர். நாங்கள் உங்களுக்கு வாக்குப் போட்டவர்கள் என்று வேறு மறைமுகமாக அச்சுறுத்தல்களையும் விடுக்கின்றார்கள்.
இருக்கின்ற கோவில்களில் ஆறுகாலப் பூஜை செய்வதற்கும் அதில் வழிபாடு செய்வதற்கும் மக்கள் இல்லாத நிலையில் புதிது புதிதாக கோவில்களை அமைக்க முயல்வது பயனற்றது. வெறும் ஆடம்பரமான செயலாகும். முதலில் இருக்குங் கோவில்களை வினைத்திறனுடன் நடாத்த முயற்சிப்போம்.
அதே நேரம் மக்கள் சேவைதான் இறைவனுக்கு நாங்கள் செய்யக்கூடிய தலையாய சேவை என்பதை மறக்காது மக்களின் வாழ்க்கை நிலை, கல்வி, அவர்களின் வசதிகள் போன்றவற்றை உயர்த்த முன்வருவோமாக!
ஒரு சமூகம் முன்னேற்றகரமான நிலையை அடைவதற்கு கல்வி மட்டும் போதுமானதாக இருக்கமுடியாது. கல்வியுடன் சேர்ந்து தெளிவான சிந்தனையும், விடாமுயற்சியும், மக்களிடையே காணப்படக்கூடிய ஒற்றுமையுந்தான் அவர்களை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும்.
இந்த வகையில் பின்தங்கிய பகுதிகளில் மிக அடிமட்ட நிலையில் வாழ்ந்த பலரும் இன்று பல வெளிநாடுகளுக்குச் சென்று தம்மை வளப்படுத்திக் கொண்டுள்ளதுடன் தாம் சார்ந்த மக்களுக்காக தமது ஒரு குறிப்பிட்ட பங்களிப்பைத்தன்னும் நல்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். ஆனால் சிலரோ தாம் வாழ்ந்த கிராம சூழ்நிலையை மறந்து தற்போது பெற்றுள்ள செல்வச் செழிப்பினால் பெருமிதப் போக்கில் தமது நடையுடைபாவனைகளை மாற்றிக் கொண்டுள்ளனர்.
இவர்கள் காலத்தினால் திருத்தப்படவேண்டியவர்கள். ஒன்றை வெளிநாட்டில் வாழும் எம்மவர் பலர் புரிந்து கொள்கின்றார்கள் இல்லை. தற்போதைய நிலை என்றுந் தொடரும் என்று நினைக்கின்றார்கள். தமது மக்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்றன என்று வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை அடித்து விரட்டும் நிகழ்வுகள் ஒன்றும் சரித்திரங்களில் புதியதல்ல. உங்கள் மக்களுடன் தொடர்பு வைத்திருப்பதை நீங்கள் விரும்பினீர்கள் என்றால் தொடர்ந்து உங்கள் கொடைகளை அவர்களுக்குக் கொடுத்து வருதல் உங்கள் வருங்கால சந்ததியினருக்கும் நன்மை பயக்கும்.
எனவே இல்லாமையும், ஏழ்மையும் ஒரு மனிதனுக்கு நிரந்தரச் சொத்தல்ல. வறுமையில் பிறந்த பலர் பிற்காலத்தில் செல்வச் செழிப்புடன் மிளிர்ந்ததை நாம் அனுபவ வாயிலாக அவதானித்துள்ளோம். எனவே எமது கடின உழைப்பும் விடாமுயற்சியும் எம்மை வல்லவர்களாக மாற்றும். ஏன் நல்லவர்களாகவும் மாற்றும் என அவர் மேலும் தெரிவித்தார்