அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் ஆஸ்பென் நகருக்கு அருகே லோயர் உட்டிகிரீக் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டை சேர்ந்த 5 வயது சிறுவன், கடந்த 17–ந் தேதி இரவு தனது சகோதரனுடன் வீட்டுக்கு வெளியே முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தான்.
வீட்டுக்குள் இருந்த தாய்க்கு திடீரென தனது 5 வயது மகன் அலறுகிற சத்தம் கேட்டது.
உடனே அவர் வெளியே ஓடி வந்து பார்த்தால், அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே ஒரு சிங்கம், அவரது 5 வயது மகனை தனது வாயில் கவ்விப்பிடித்திருந்தது. அந்த சிங்கத்தின் வாயில் இருந்து விடுபட சிறுவன் கை, கால்களை உதறி போராடிக்கொண்டிருந்தான்.
முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பின் சுதாரித்துக்கொண்ட அந்த தாய், சிங்கத்தின் ஒரு பாதத்தை பிடித்து உயர்த்தியவாறு, சிங்கத்தின் வாய்க்குள் தனது வலது கையை கொண்டு சென்று, போராடி மகனை இழுத்து வெளியே போட்டார்.
அதைத் தொடர்ந்து சிங்கம், அருகில் உள்ள காட்டுக்குள் ஓடி விட்டது.
அந்த சிறுவனுக்கு முகம், தலை, கழுத்து பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. சிங்கத்துடன் போராடியதில் அவனது தாய்க்கும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.
படுகாயம் அடைந்த சிறுவன் டென்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றான்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலராடோ மாகாணத்தில் உள்ள காடுகளில் சுமார் 4,500 சிங்கங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.