“இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் கடும்போக்காளர்கள் சிலர் பல்வேறு பிழையான வியாக்கியானங்களை முன்வைத்து வருகின்றபோதும் தற்போதைய அரசின் கீழ் இரண்டு நாடுகளும் மிகுந்த புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருகின்றன. எனவே, இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகள் ஒருபோதும் பாதிப்படையாது.”
– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இந்தியாவின் உதவிகளுக்குப் பெரு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அவர் கூறினார். இந்திய அரசுக்கும் – மக்களுக்கும், இலங்கை அரசினதும் – மக்களினதும் சார்பில் இந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் யாழ். துரையப்பா விளையாட்டரங்கு திறப்பானது நல்லிணக்கத்தின் முக்கியமான அடையாளம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கு நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த விளையாட்டரங்கை இந்தியப் பிரதமருடன் இணைந்து திறந்து வைப்பதில் மகிழ்சியடைகின்றேன். இதன் முழுமையான புனர் நிர்மாணச் செலவையும் இந்தியா ஏற்றுக்கொண்டது. இதற்காக இந்தியப் பிரதமருக்கும் – இந்திய மக்களுக்கும், இலங்கை அரசு சார்பிலும், இலங்கை மக்கள் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இலங்கை – இந்திய நட்புறவில் இது முக்கியமான தருணம். இலங்கை – இந்திய நட்புறவு சரித்திர காலம் முதல் இருந்து வருகின்றது. இன்றைய நிகழ்வு முக்கியமானது. நாளை (இன்று) பொசன் தினம், இது பௌத்தர்களுக்கு முக்கியமான நாள். இந்தியாவினால்தான் இலங்கைக்கு பௌத்த தர்மம் கிடைக்கப் பெற்றது.
எமது நாட்டின் அபிவிருத்திக்காக இந்தியாவின் உதவி நீண்ட காலமாக கிடைத்து வருகின்றது. இந்த நாட்டில் நீண்ட காலம் போர் நிலவியது. அதன் பின்னர் சமாதானம் ஏற்பட்டது. சமாதானம் ஏற்பட்ட பின்னர் இந்தியா பல உதவிகளைச் செய்து வருகின்றது.
இலங்கை – இந்தியாவுக்கு இடையில் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நெருக்கம் காணப்படுகின்றது. இதற்காக நாங்கள் தியாக உணர்வுடன் பணிபுரிகின்றோம்.
எங்களுடைய இரண்டு நாடுகளினதும் முன்னேற்றத்துக்காக நாங்கள் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றோம். அதற்கு சில கடும்போக்காளர்கள் பலவிதமான விடயங்களைச் சொன்னாலும், நாங்கள் சர்வதேச ரீதியாக இரண்டு நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றோம்.
ஒரு விளையாட்டரங்கு என்பது தேசிய நல்லிணக்கத்துக்கு ஒரு முக்கியமான இடமாகும். இன – மதம் எல்லாவற்றையும் விடுத்து ஒன்றுகூடும் இடமாகும். எனவே, இது நல்லிணக்கத்துக்கு முக்கியமான அடையாளம் ஆகும். அல்பிரட் துரையப்பா கொலை செய்யப்பட்டமையானது ஜனநாயக விரோதமான சம்பவமாகும்.
இந்திய அரசுக்கும் – மக்களுக்கும் மீண்டும் ஒரு தடவை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்று இடம்பெறும் யோகா தின நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு ஒன்று கூடியுள்ளனர். இதே போன்று புதுடில்லியிலும் யோகா தின நிகழ்வு இடம்பெறுகின்றது.
துரையப்பா விளையாட்டரங்கு புனரமைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய இந்திய அரசுக்கும், நிறுவனங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” – என்றார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.