காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி வளாகத்தினுள் இராணுவத்தினர் புத்தர் சிலையினை வைத்து வழிபாடு செய்து வந்துள்ளனர். அத்துடன் அங்கு இருந்த காளி கோவிலையும் பிள்ளையார் கோவிலாக மாற்றி உள்ளனர்.
யாழ்.நடேஸ்வரா கல்லூரி மற்றும் யாழ்.நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைககளும் 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் திகதி முதல் உள் நாட்டு யுத்தம் காரணமாக சொந்த கட்டடங்களில் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அப்பகுதியினை கடந்த 26 வருடகாலமாக இராணுவத்தினர் கையகப்படுத்தி உயர் பாதுகாப்பு வலயமாக பிரடகனப்படுத்தி இருந்தனர்.
அதன் போது பாடசாலை வளாகத்தினுள் இருந்த காளி கோவிலின் பின்புறமாக இருந்த அரச மரத்தின் கீழ் புத்தர் சிலையினை வைத்து இராணுவத்தினர் வழிபட்டு வந்துள்ளனர்.
அத்துடன் அந்த கோவிலில் மூல மூர்த்தியாக காளி அம்மனை வைத்தே பாடசாலை சமூகத்தினர் வழிபாடு செய்து வந்து இருந்தனர்.
இராணுவத்தினர் அக்கோவிலில் மூல மூர்த்தியாக இருந்த காளி அம்மனை அகற்றி பிள்ளையார் சிலையினை வைத்து வழிபாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 12ம் திகதி ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா பாடசாலை மீளவும் சொந்த இடத்தில் இயங்குவதற்கு அனுமதித்தார்.
அதனை தொடர்ந்து கடந்த 2ம் திகதி குறித்த இரு பாடசாலைகளும் சொந்த இடத்தில் ஆரம்பமான போது இராணுவத்தினரால் அரச மரத்தின் கீழ் வைத்து வழிபாடு செய்யப்பட்ட புத்தர் சிலையினை இராணுவத்தினர் அங்கிருந்து எடுத்து சென்று இருந்தனர்.
அதேவேளை கடந்த 2ம் திகதி பாடசாலை மீள ஆரம்பிக்க முன்னர் குறித்த கோயிலில் பாடசாலை சமூகத்தினர் பொங்கல் பொங்கி விஷேட பூஜை வழிபாடுககளை மேற்கொண்டு இருந்தனர்.