வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும் இடத்தெரிவு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதகமான பதில் தருவார் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொருளாதார மத்திய நிலையத்தின் இடத்தெரிவு குறித்து பேசப்பட்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“மத்திய அரசாங்கத்தினால் வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைக்க வடக்கு விவசாய அமைச்சு அனுமதி மறுத்துள்ளது. இதனை நாம் ஓமந்தையில் அமைக்க கோரிய போதும் அரசாங்கம் சில சாட்டுப் போக்குகளைக் கூறி அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது பொருத்தமான இடங்களை குறிப்பிட்டு பிரதமருக்கு தெரியப்படுத்தியுள்ளேன். இன்னும் ஒரு வாரங்களுக்குள் அவர் அதனை பரிசீலித்து சாதகமான பதிலைத் தருவார் என நம்புகின்றேன்.
இத்திட்டத்தை மன்னாருக்கோ, அனுராதபுரத்திற்கோ கொண்டு செல்ல விடமுடியாது. இத்திட்டம் வவுனியாவிற்கானது. அது வவுனியாவில் தான் அமைக்கப்படும். பொருத்தமான இடங்களை தெரியப்படுத்தியிருக்கின்றோம். அதற்கு சாதகமான பதில் வரும் என நான் நம்புகின்றேன். அதனால் இது பற்றி ஒரு வாரம் முடிய இறுதி முடிவு எடுக்கலாம்” என முதலமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது, வடமாகாண சபையில் தாண்டிக்குளம் காணியை வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது. தற்போது அங்கு எடுத்த தீர்மானத்தை மீறுகிறீர்கள் என வடமாகாண சபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதனும் ஜெயதிலகவும் முதலமைச்சருடன் தர்க்கித்தனர்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர், “வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது நாம் இது அமைப்பதற்கான இடத்தெரிவு தொடர்பில் அரசுடன் பேசிக் கொண்டிருந்தோம். அங்கு தீர்மானம் தான் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நாம் பொருத்தமானதைப் பேசித் தான் செய்ய வேண்டும். வடக்கு அமைச்சர்களுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுக்கள் வடமாகாண சபையில் முன்வைக்கப்படுகிறது. அதற்காக அவர்கள் மோசடி செய்தார்கள் என கூற முடியாது. பேசி, விசாரித்து தான் அதனை கூற முடியும். அதுபோல் இந்த விடயத்தையும் பேசித் தான் பொருத்தமான இடத்தை வழங்க முடியும். அதற்காக ஒரு வாரம் பொறுத்துக் கொள்ளுமாறே கோருகின்றேன்” எனத் தெரிவித்தார்.
இதேவேளை, பொருளாதார மத்தியநிலையம் தொடர்பில் அரச அதிகாரிகள் மௌனமாக இருந்த நிலையில் மக்கள் பிரதிநிதிகள் தமக்குள் தர்க்கித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.