அலவி மௌலானா காலமானார்!

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அல்ஹாஜ் அலவி மௌலானா நேற்று புதன்கிழமை மாலை கொழும்பில் காலமானார்.

alavi moulaana5555

சுதந்திரக் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரான அலவி மௌலானா ஸ்ரீமாவோ தலைமையிலான அரசில் ஜனவசம நிறுவனத் தலைவராகச் செயற்பட்டிருந்தார்.

அதன் பின்னர் சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவின் முக்கியஸ்தராகவும், கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும் நீண்ட காலமாக அவர் சுதந்திரக் கட்சிக்கு பங்களிப்புகளை வழங்கியிருந்தார்.

அத்துடன் ஏராளமான தொழிலாளர் நலப் போராட்டங்களில் ஈடுபட்டு, இலங்கையின் மூத்த தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவராகவும் அவர் மதிக்கப்பட்டிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் நடைபெற்ற 1980ஆண்டு வேலைநிறுத்தப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான போராட்டம் ஒன்றின்போது குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு கத்திக்குத்துக்கும் இலக்காகி இருந்தார்.

1994ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் ஊடகத்துறை பிரதி அமைச்சராகவும், தொழில் அமைச்சர் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.

அதன்பின்னர் 2004ஆம் ஆண்டு தொடக்கம் மேல் மாகாண ஆளுநராக இரண்டு தடவைகள் பதவி வகித்திருந்தார்.

அண்மையில் சுகவீனமுற்றிருந்த நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த அலவி மௌலானா, நேற்று மாலை தனது 84 ஆவது வயதில் காலமானார்.

Related Posts