நடிகர் கலாபவன் மணியின் உடலில் அளவுக்கு அதிகமாக மெத்தனால் கலந்திருந்ததாக ஹைதராபாத் ஆய்வகம் அறிவித்துள்ளதால் இந்த வழக்கு மீண்டும் சூடு பிடித்துள்ளது.
பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த மார்ச் 6ம் தேதி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார். மருத்துவமனையில் நடந்த முதல் கட்ட பிரேத பரிசோதனையில் அவரது உடலில் மெத்தனால் என்ற நச்சுப்பொருள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கலாபவன் மணி இறப்பதற்கு முந்தைய நாள் இரவு அவரது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பீர் குடித்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே அவருக்கு கல்லீரல் பாதிப்பு இருந்தது. இந்நிலையில் அளவுக்கு அதிகமாக பீர் குடித்ததால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.
ஆனால் பின்னர் நடந்த பிரேத பரிசோதனையில் அவரது உடலில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கூடுதல் பரிசோதனைக்காக கலாபவன் மணியின் கல்லீரல், சிறுநீரகம், ரத்தம் உள்பட முக்கிய உறுப்பு மாதிரிகள் ஹைதராபாத்தில் உள்ள ஆய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட சோதனையின் அறிக்கை திருச்சூர் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கலாபவன் மணியின் உடலில் 45 மிகி மெத்தனால் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாதாரணமாக எவ்வளவு மது அருந்தினாலும் உடலில் 40 மிகி மேல் மெத்தனால் இருக்காது.
கலாபவன் மணி உடலில் 45 மிகி மெத்தனால் இருந்ததால் இது இயற்கையான மரணமாக இருக்காது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.