அமெரிக்காவில் ஓய்வெடுக்கும் நடிகர் ரஜினிகாந்த்தின் உடல்நிலை பற்றி வதந்தி பரவி உள்ளது. அவர் நலமுடன் இருப்பதாகவும், 2 வாரத்தில் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்த், கடந்த 2011-ல் ‘ராணா’ படப்பிடிப்பில் இருந்தபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 40 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்து சென்னை திரும்பினார். அதன்பிறகு ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தில் நடித்தார். தொடர்ந்து ‘லிங்கா’ படத்திலும் இரு வேடங்களில் நடித்தார்.
இடையில் ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ பரிசோதனைகளும் செய்து கொண்டார். தற்போது ‘கபாலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் வயதான தாதா கதாபாத்திரத்தில் அவர் வருகிறார். ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார். இதற்கான டப்பிங், ரீரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், மிக்சிங் பணிகள் முடிந்துள்ளன. இந்த படம் ஜூலை மாதம் திரைக்கு வர இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ என்ற பெயரில் தயாராகும் எந்திரன் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில் கடந்த மாதம் குடும்பத்தினருடன் திடீரென்று ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். ஓய்வெடுப்பதற்காக அவர் சென்று இருப்பதாக கூறப்பட்டது.
இதற்கிடையில் கபாலி பாடல் வெளியீட்டு விழாவை சென்னையில் ரசிகர்களை அழைத்து பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் அந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என்றும் தகவல்கள் பரவின.
ஆனால் அந்த விழா ரத்து செய்யப்பட்டு விட்டது. அதற்கு பதிலாக நாளை(12-ந்தேதி) இணையதளத்தில் பாடல்கள் நேரடியாக வெளியிடப்படுகின்றன. கபாலி பட டிரைலரும் ‘யூடியூப்’ இணையதளத்தில் வெளியிடப்பட்டு உலகம் முழுவதும் பலகோடி ரசிகர்கள் பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ரஜினிகாந்த் உடல் நிலைப்பற்றி வதந்திகள் பரவி உள்ளன. டாக்டர்கள் அறிவுரைப்படி அமெரிக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக இணையதளங்களில் தகவல்கள் பரவி உள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் உண்மைதானா? என்று ஒருவருக்கொருவர் விசாரித்த வண்ணம் இருந்தார்கள்.
ரஜினிகாந்த் தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது, அவர் நலமுடன் இருக்கிறார். விரைவில் சென்னை திரும்புவார் என்று கூறப்பட்டது. ‘கபாலி’ பட தயாரிப்பாளர் எஸ்.தாணு இது குறித்து கூறும்போது, ‘‘ரஜினிகாந்த் ‘2.0’ பட வேலையாக அமெரிக்கா சென்று இருக்கிறார். அங்கு அவர் நலமுடன் இருக்கிறார். நேற்றுமுன்தினம் கூட என்னுடன் போனில் பேசினார். இரண்டு வாரத்தில் அவர் சென்னை திரும்புவார். கபாலி படத்தின் பாடல்களை இணையதளத்தில் நேரடியாக நாளை வெளியிட திட்டமிட்டு உள்ளோம்’’ என்றார்.