சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த சான்றும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்படவில்லை என்று, உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது அலட்சியத்தினால் ஏற்பட்ட விபத்தா அல்லது திட்டமிட்ட செயலா என்று, விசாரணைகள் முடியும் வரை – எந்த முடிவுக்கும் வர முடியாது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, வெடிவிபத்து ஏற்பட்ட சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கு நீண்ட காலமாக உரிய வகையில் பராமரிக்கப்படவோ, கண்காணிப்படவோ இல்லை என்றும் மற்றொரு இராணுவ உயரதிகாரி தெரிவித்துள்ளார். இந்த ஆயுதக் கிடங்கு முற்றிலும், நிலத்துக்குக் கீழ் அமைக்கப்பட்டதல்ல. மோட்டார் குண்டுகளும், ஏனைய வெடிபொருட்களும் தரைத்தளத்தில் இருந்த கட்டடங்களிலேயே களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.போரின் இறுதிக்கட்டத்தில், 2008-2009 ஆம் அண்டு காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட கனரக ஆயுதங்கள், குண்டுகள், வெடிபொருட்களே அங்கு சேமிக்கப்பட்டிருந்தன.
இவற்றில் உற்பத்தியின் போது சேதமடைந்தவையும் இருந்திருக்கலாம். ஆயுதக் கிடங்குகள், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும்.திடீரென அதிகரிக்கும் வெப்பநிலை, வெடிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதால், அதனைத் தடுப்பதற்கு குளிர்ச்சியான ஜெலி போன்ற பொதிகள் வெடிபொருள் பெட்டிகளில் வைக்கப்படுவது வழக்கம் என்றும் அந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.