யுத்தத்தினால் வீடுகளை இழந்த வட கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்காக கட்டப்படவுள்ள 65,000 விடூகளை பெற்றுக் கொள்வதற்கு 90,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மீள் குடியேற்ற மற்றும் சிறைச் சாலைகள் தொடர்ப்பான அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் உரையாற்றிய போது இதனை அவர் தெரிவித்தார்.
கட்டப்படும் வீடுகள் தரம் குறைவாக இருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன், பேராதெனிய பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப ஆலோசனைகளுக்கு ஏற்ப வீடுகள் கட்டப்படுவதாக தெரிவித்தார். அதேபோன்று இவ்வாறு கட்டப்படும் வீடுகளில் பொது மக்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் உள்ளடக்கப்படும் என்றும் கூறினார்.
யுத்தத்தினால் சேதமடைந்த 2,400 வீடுகளை புனரமைக்க 480 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதன் படி ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபா வழங்கப் படவுள்ளதாக தெரிவித்தார்.