எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்கள் பாரளுமன்றில் சமர்ப்பித்த பிரேரணை முழுமையாக
2016 ஜூன் மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றம் ஒத்திவைப்பு வேளையில் பொதுமக்கள் முக்கியத்துவம் வாய்ந்த விடயம் ஒன்று தொடர்பான முன்னகர்வு விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான அறிவித்தலொன்றை இத்தால் தருகின்றேன்.
இந்த நாட்டில் ஆயுதக் கலவரம் ஒன்று முடிவடைந்து ஏழு வருடங்கள் கடந்து விட்டன. குறிப்பிடப்பட் ஆயுதக் கலவர காலத்தில் பல இலட்சக்கணக்கான தமிழர்களும் ஏனையவர்களும் வடக்குக் கிழக்கில் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தார்கள் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களும் ஏனையவர்களும் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தாம் வாழ்ந்த அவர்களது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள்
என்ற தெளிவான உறுதிமொழிகளை வழங்கியிருந்தனர். இதுவே அரசாங்கத்தின் உறுதியான கொள்கை எனத் தெரிவிக்கப்பட்டது.
பெருந்தொகையான இடம்பெயர்ந்தோர் இன்னமும் தங்கள் சொந்த வீடுகளுக்கும் காணிகளுக்கும் திரும்பிச் சென்று தங்கள் ஜீவனோபாய நடவடிக்கைகளையோ, தொழிலையோ மேற்கொள்ள முடியாதவாறு தடுக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக இவர்களது இடங்களில் படையினர் இன்னமும் தங்கியிருப்பதாலும் அல்லது அக்காணிகள் பாவிக்கப்படாதபோதும் அவை இன்னமும் விடுவிக்கப்படாமலும் இருப்பதுமே இதற்கான காரணமாகும்.
குறிப்பிட்ட காணிகளின் சில பகுதிகளை அதன் உண்மையான உரிமையாளர்களுக்குக் கையளிப்பதற்காகச் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், இன்னும் அதிக அளவான காணிகளில் படையினர் நிலைகொண்டுள்ளதால், அவற்றின் உரிமையாளர்கள் அக்காணிகளில் மீளச் சென்று குடியமர முடியாமலும், அக்காணிகளில் பயன்தரு உற்பத்தி முயற்சிகளை மேற்கொள்ள முடியாமலும் உள்ளனர்.
ஏற்கெனவே படையினரால் பாவனைக்குட்படுத்தப்பட்டுள்ள காணிகளுக்கு மேலதிகமாக காணிகளை அளவீடு செய்யக் கோரி படையினர் விண்ணப்பித்துள்ளதால் அக் காணிகளை அளவை செய்யச் செல்லும் அரச நில அளவையாளர்களுக்கும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் எதிராகப் பொதுமக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
அத்தோடு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற உறுதிமொழியும் கடந்த ஆண்டில் தெரிவிக்கப்பட்டது.
ஆயினும், இதுவரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 30 பேர் தவிர ஏனையவர்கள், பதிலீடு செய்யப்படும் என அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ள ஒரு சட்டத்தின் கீழ் இன்னமும் சிறைகளில் அடைக்கப்பட்டு துன்பத்துக்குள்ளாகின்றனர். கடந்த காலங்களில் இதேபோன்ற விதத்தில் தடுத்துவைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும் தாம் விடுவிக்கப்படாது பாகுபாடு காட்டப்படுவதாக இக் கைதிகள் முறையிடுகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களது வாழ்வை மீளமைத்துக் கொள்ளக்கூடிய விதத்தில் அவர்களுக்குத் தேவையான வீடமைப்பு மற்றும் வாழ்வாதார உதவிகள் உட்பட ஏனைய அவசரமான மற்றும் அவசியமான உதவிகளை வழங்குவதற்கான எத்தகைய முறைப்படுத்தப்பட்ட செயற்திட்டங்களும் இல்லாத நிலைமையே உள்ளது. படையினர் பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படுவதானது அப்பிரதேசங்களில் வாழும் குடிமக்களின் உரிமைகளைப் பறிப்பதோடு, அவர்களுக்குக் கஷ்டங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதற்கு வெளிமாவட்ட மீனவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளமை போன்ற செயற்பாடுகளால், தமது சுயதொழில் மூலம் ஜீவனோபாயத்தை உழைத்துக் கொள்ளும் உள்ளுர் மக்களுக்கு வெளிச் சக்திகளால் பாரிய அநியாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கானமல்போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான விடயமும் ஒரு திருப்திகரமான முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத் தொழில் நியமனங்கள் தொடர்பாகவும். ஆயிரக்கணக்கான உள்ளுர்வாசிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்ற நிலமையிலும் தொழிலாளர் போன்ற தரங்களுக்குக்கூட வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன அரச பதவிகளுக்கான நியமனங்கள் அரசியல் செல்வாக்கினுடாகச் செய்யப்பட்டு வருகின்றமையால், கடந்த காலங்களில் தமிழ் இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டுப் பாகுபாடு காட்டப்பட்ட நிலைமை மேலும் தொடர்கின்றது.
தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசங்களில் அரசினாலும் அதன் முகவர் நிறுவனங்களினாலும் வேறு சிலராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பல செயற்பாடுகள், குறிப்பாக அம்மக்களின் சிவில் நிருவாகம், காணி, வணக்கத்தலங்களுக்கான இடம், கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் வேறு முக்கியமான விடயங்களில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இன நல்லிணக்கத்துக்கும் எதிர்கால நல்வாழ்வுக்கும் குந்தகம் விளைவிப்பதாகவும் அமைந்துள்ளன.
இங்கே கோரப்படுவது.
1. வடக்கு மற்றும் கிழக்கில் படையினர் உடைமையின்கீழ் உள்ள காணிகள் அக்காணிகளுக்கு உரித்துடைய குடிமக்களுக்கு உடனடியாக மீளக் கையளிக்கப்பட வேண்டும்
2. பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வாழ்வைப் பயனுள்ள விதத்தில் மீளமைக்கவும் கட்டியெழுப்பவும் தேவையான, முறையாகத் திட்டமிடப்பட்ட செயற்திட்டம் ஒன்று அவசரமாகச் செயற்படுத்தப்பட வேண்டும்.
3. தமிழ்மக்களுக்கு அரசியல், பொருளாதார, கலாசார மற்றும் சமூகரீதியாகப் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள், உண்மையான, அர்த்தமுள்ள நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சமத்துவம் மற்றும் நீதி அடிப்படையான நிரந்தர அமைதியை இந்த நாட்டில் உருவாக்கும் முயற்சிகளுக்குக் குந்தகமாக அமையுமென்பதால், அத்தகைய செயற்பாடுகளை உடன் மீளப்பெறவும், திருத்தியமைக்கவும், நிவாரணமளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளல்
இராசம்பந்தன்.
பாராளுமன்ற உறுப்பினர்_திருகோணமலை மாவட்டம்,
தலைவர் – இலங்கைத் தமிழரசுக் கட்சி,
எதிர்க்கட்சித் தலைவர்.