பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு கல்வித் தகைமை கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் முன்னெடுக்க வேண்டுமென நேற்று சபையில் வலியுறுத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் வாய் மூடியிருந்தவர்கள் இன்று வாய் திறக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்;
கடந்த ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷதான் நிதியமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனால் இன்று நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்தவர்கள் அன்று மஹிந்த ராஜபக் ஷவிற்கு எதிராக வாய்கூட திறக்கவில்லை. மௌனித்திருந்தனர்.
அன்று எதனோல் கொண்டு வந்தவர்கள், மது விற்பனையில் ஈடுபட்டோர் உட்பட மஹிந்த ராஜபக் ஷவிற்கு சார்பானவர்களுக்கு சுங்கவரிகளோ அல்லது வேறு எந்தவரிகளோ அறவிடப்படவில்லை. சலுகைகள் வழங்கப்பட்டன.
இதனால் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானங்கள் கிடைக்காமல் போயின. ஆனால் இன்றைய நிதியமைச்சர் சுங்கவரி உட்பட அனைத்து வரிகளையும் அறவிடுகின்றார்.
நாட்டுக்கு சேர வேண்டிய வரிகள் இன்று கிடைக்கின்றன. அரச வருமானம் அதிகரித்துள்ளது. இவ்வாறு நாட்டுக்கு வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் நிதியமைச்சருக்கு எதிராகவா நம்பிக்கை இல்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ளனர்.
நாட்டின் ஆலோசனையின் பேரில் அல்ல கடந்த ஆட்சிக்காலத்தில், நிதியமைச்சரின் செயலாளராகவிருந்த பி.பி. ஜயசுந்தரவின் ஆலோசனையை கேட்டே தேர்தல் நடத்தப்பட்டது. கடந்த காலத்தில் சுங்கத்தையும் திறைசேரியையும் அழித்தவர்கள் இன்று நம்பிக்கை இல்லா பிரேரணையை முன்வைக்கின்றனர்.
பாராளுமன்றத்தில் இன்று நிதி நிர்வாகம் தெரியாதோர் பல்கலைக்கழகம் செல்லாதோர் கல்வி அறிவு இல்லாதவர்கள் வெறுமனே கூச்சலிடுகின்றனர்.
எனவே படித்தவர்கள் பாராளுமன்றம் வர வேண்டும்.பாராளுமன்றத்துக்கு வருவோருக்கு கல்வித் தகைமை இருக்கவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் மேற்கொள்ள வேண்டும் என்றார்.