Ad Widget

தென் ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Imran Tahir

மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் தென் ஆப்பிரிக்காவும் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 34.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களுக்கு சுருண்டது.

முன்னதாக முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆம்லாவும், டி காக்கும் களமிறங்கினர். இதில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹஸல்வுட்டின் பந்தில் எல்பிடபிள்யு ஆனார் டி காக்.

அவரைத் தொடர்ந்து வந்த ரிலீ ரஸ்ஸவ், நாதன் லையானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து டி வில்லியர்ஸ் களமிறங்க, மறுமுனையில் ஆம்லா ஆட்டமிழந்தார்.

மொத்தம் 46 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்திருந்த அவர் ஸ்மித், ஃபிஞ்ச் ஆகியோரால் ரன் அவுட் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து டுமினி களத்துக்கு வந்தார்.

தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 97 இருந்த நிலையில், 22 ரன்கள் எடுத்திருந்த டி வில்லியர்ஸ் கோல்டர் நைலின் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து பெஹார்டியன் களமிறங்க, டுமினி 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

பெஹார்டியன் சற்று நிலைத்து ஆடி அரைசதம் கடந்தார். டுமினியைத் தொடர்ந்து வந்த வேய்ன் பார்னெல், ஆரோன் ஃபாங்கிúஸா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

பெஹார்டியன் 82 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 62 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்ஸ்வெல்லின் பந்துவீச்சில் போல்டானார்.

தொடர்ந்து வந்த இம்ரான் தாஹிர் ரன்கள் ஏதும் இன்றி ஆட்டமிழந்தார். 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்க அணி. ரபாடா 15 ரன்களுடனும், டப்ரைஸ் ஷம்ஸி ரன்கள் ஏதும் இன்றியும் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் ஹஸல்வுட், கோல்டர் நைல், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். நாதன் லையான், ஆடம் ஸம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 190 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி. இதன் தொடக்க வீரராக வந்த வார்னர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். உடன் வந்த ஆரோன் ஃபிஞ்ச் நிலைத்து ஆடி அரைசதம் கடந்து 72 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து வந்த உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், மேத்தியு வேட் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் பரிதாபமாக பெவிலியன் திரும்பினர்.

கோல்டர் நைல், ஸம்பா ஆகியோர் டக் அவுட் ஆகினர். நாதன் லையான் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனால் 34.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலிய அணி.

ஹஸல்வுட் மட்டும் ஆட்டமிழக்காமல் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டுகளும், பார்னெல், இம்ரான் தாஹிர், ஃபாங்கிúஸா தலா 2 விக்கெட்டுகளும், ஷம்ஸி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தென் ஆப்பிரிக்காவின் பெஹார்டியன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Related Posts