யுத்த காலத்தில் குண்டுத்தாக்குதல்களுக்கு இலக்காகி உடலில் செல் துகள்களுடன் வாழும் மாணவ மாணவியர், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் முதியவர்களுக்கு அரசாங்கம் உதவி வழங்குமென பிரதமர் ரணில்விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
நேற்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியவேளையில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அண்மையில் உடல் அவயமொன்றிலிருந்த செல் துகள்களை ஒரு பாடசாலை மாணவன் 5 இலட்சம் செலவழித்து அகற்றியிருந்தான். இவ்வாறு சிகிச்சை பெறவேண்டிய மாணவர்கள் வன்னியில் 1000 பேருக்கு மேற்பட்ட மாணவர்கள் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்கின்றனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீள்குடியேற்ற அமைச்சர்மூலம் இதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், செல் துகள்களுடன் பாடசாலை மாணவர்கள் வாழ்வது தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனவும் உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், வன்னியில் மக்கள் போரினால் பாதிக்கப்பட்டமை தொடர்பாகவும் மக்களின் வேதனைகள், துன்பங்கள், இழப்புக்கள் குறித்து தாம் அறிந்திருப்பதாகவும் கூறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உடலில் செல் துகள்கள், வெடிமருந்துகளுடன் வாழும் மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் வயோதிபர்கள் ஆகியோருக்கு அரசாங்கம் உதவி வழங்கும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.