ரஷ்யாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவிற்கு இரண்டு வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐந்து முறை கிரான்ஸ்லாம் பட்டம் வென்ற 29 வயதான மரியா, தனது பரம்பரை நோயான நீரழிவின் தாக்கத்தாலும் வேறு சில உடல்நலக் கோளாறுகளாலும், வைத்தியர்களின் சிபாரிசின் அடிப்படையில், கடந்த 10 வருடங்களாக ‘மெல்டோனியம்’ என்ற மருந்தைப் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த ஜனவரி 1-ம் திகதி உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் மெல்டோனியத்தை தடை செய்தது.
எனினும் அதன் பின்னரும் அவர் அதனை பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கினார். இதனையடுத்து, இடம்பெற்ற பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்கு இரண்டு வருடங்கள் தடை விதித்து சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது.
தனது ஆட்டத்தில் எதிராளியிடம் விரைவில் விட்டுக் கொடுக்காத போராட்ட குணம் படைத்த ஷரபோவா 2004-ம் ஆண்டு விம்பிள்டன் இறுதிப் போட்டியில் செரினா வில்லியம்சை 6-1, 6-4 என்று வீழ்த்தி 17 வயதில் சாம்பியனானார்.
மேலும், விம்பிள்டன் பட்டம் வென்ற ரஷ்யாவைச் சேர்ந்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் தனதாக்கிக் கொண்டார் என்பது விஷேட அம்சமாகும்.