யாழில் அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் வாள்வெட்டு உள்ளிட்ட சம்பவங்களின் பின்னணியில், அரச புலனாய்வு பிரிவினரே செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்.வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-
”போராட்ட காலத்தில்கூட எமது மாணவர்களின் கல்வியில் குறைவு ஏற்படவில்லை.
கல்வியில் அவர்கள் வகித்த காத்திரமான பங்கு குறைவடையவில்லை. ஆனால், தற்போது க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றை எடுத்து நோக்கினால், ஏனைய மாகாணங்களை விட எமது மாகாணம் குறைந்த தரத்தில் உள்ளது.
காரணம், அரச புலனாய்வாளர்கள் எமது கலை, கலாசாரம், வரலாறு என அனைத்தையும் அழித்துக்கொண்டிருக்கின்றனர். இந்த அழிப்புக்கு நடுவில் நாம் நிற்கின்றோம். தெரிந்தோ தெரியாமலோ இந்த அரச புலனாய்வாளர்களின் திட்டமிட்ட சதிக்குள் எமது மாணவர்களும் இளைஞர்களும் சிக்கியுள்ளனர்.
ஆடம்பரமான வாழ்க்கை, போதைவஸ்து, மதுபாவனை, தற்போது இந்த வாள்வெட்டு என ஒவ்வொன்றாக நடந்தேறி வருகின்றது. இதற்கு 100 வீதம் அரச புலனாய்வாளர்களே பின்னணியில் உள்ளனர் என நான் தெரிவிக்கின்றேன்.
அன்று விடுதலை புலிகள் ஆயுதம் கொண்டுவந்ததையே இந்த கடற்படையினர் மிக சாதுரியமாக தடுத்து நிறுத்தி, வெற்றி கண்டார்கள். அப்படியென்றால், எமது பிரதேசத்திற்கு மிகவும் அருகில் நடக்கும் இந்த கஞ்சா கடத்தலை ஏன் தடுக்கமுடியவில்லை?ஆகவே இதன் பின்னணியில் செயற்படுபவர்கள் யார் என்பது இங்கு தெளிவாக தெரிகின்றது” என்றார்.