மக்கள் மத்தியில் இரத்ததானம் செய்தல் தொடர்பில், விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுகின்றது,இதனாலேயே நாடளாவிய ரீதியில் இரத்த வங்கிகளில் குருதித் தட்டுப்பாடு நிலவுகின்றது என யாழ்,போதனா வைத்தியசாலை,இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி T.விஸ்வேந்திரன் தெரிவித்துள்ளார் யாழ்,போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கி சேவை ஓரளவிற்கு திருப்திகரமாக காணப்படுகின்றது.எனினும்,சில குருதிவகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
இதன்படி,O,A,B போன்ற எதிர்மறை இரத்தவகைகளுக்கு கூடுதல் தட்டுப்பாடு நிலவுகின்றது.அதனை நிவர்த்தி செய்வதற்கு பொது மக்கள் முன்வரவேண்டும்,எனினும்,மக்களிடையே இரத்ததானம் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமையே இதற்கு காரணம்,என சுட்டிக்காட்டினார்.
மேலும்,இரத்ததானம் தொடர்பான விளக்கத்தினை பொதுமக்களுக்கு ஊடகங்களே வழங்க முன்வரவேண்டும் என்றும் மேலதிக தகவல்களை யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியூடாக பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 18 – 60 வயதுக்குட்பட்ட, 50 கிலோ நிறையுடைய, ஆரோக்கிமான நிலையிலுள்ள,சுகதேகி ஒருவரால் இரத்ததானம் செய்து கொள்ள முடியும் என்பதை வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை,யாழ்,போதனா வைத்திய சாலை,இரத்த வங்கியிலிருந்து, பருத்தித்துறை மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாவட்ட பொது, வைத்திய சாலை இரத்த வங்கிகளிற்கு, குருதி வழங்கப்படுவதாகவும் மேலும், தெரிவித்துள்ளார்.
இலங்கையில், விபத்துக்கள் மற்றும் அனர்த்தங்கள் நிறைந்துள்ள கால கட்டத்தில் இரத்ததானம் என்பது உயிர்காக்கும் முக்கிய தேவையாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.