Ad Widget

யுத்த பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பொருத்துவீடுகள் தகுதியானவை

வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீடுகள் யுத்த பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு பொருத்தமானவையாக அமையும் என்று பேராதனை பல்கலைகழகம் உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது.
 
மீள்குடியேற்றத்துறை அமைச்சின் அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
 
உலோகங்களினால் அமைக்கப்படும் 65 ஆயிரம் பொருத்து வீடுகள் வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ளன.
 
இந்த வீடுகள் மக்கள் வாழ்வதற்கு ஏற்புடையதல்ல என்று, பல்வேறு தரப்பினரால் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
 
எனினும் இந்த வீட்டுத்திட்டமே யுத்தப் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று, பேராதனை பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
 
இதற்கு முன்னர் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த வகையிலான வீடுகள் மக்கள் நீண்டகாலத்துக்கு வசிப்பதற்கு ஏற்புடையதல்லவென்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
அதேநேரம் கடந்த தினம் இடம்பெற்ற விசேட நாடாளுமன்ற அமர்வில் வைத்தும், குறித்த வீட்டுத்திட்டம் குறித்த விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
 
இதன்போது குறித்த 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை பொருத்துவீடுகளாக அன்றி, மக்கள் வசிப்பதற்கு ஏற்றதாக அமைத்துக் கொடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரி இருந்தார்.
 
இதன்போது, குறித்த வீடுகள் அனைத்தும் கல்வீடுகளாகவே அமைக்கப்படும் என்று ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts