“ஒரு புரட்சிகரமான ஆட்சி மாற்றத்துடன் எனது அரசு பல்லின சமூக சூழலில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும், நிலையான அபிவிருத்தி சூழலுக்குமான வழியை ஏற்படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளது. தற்போது எமது மக்கள் சுதந்தரமாகவும் மனித உரிமைகள் மதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளார்கள்.” இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜப்பான் இஷி – சிமா நகரில் நேற்று நடைபெற்ற ஜி – 7 உச்சி மாநாட்டின் எல்லை கடந்த கூட்டத் தொடரில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
“நாங்கள் ஏற்படுத்திய மாற்றத்தை ஜி – 7 நாடுகள் எப்படி பாராட்டின என்பதை நான் அறிவேன். இந்த மாற்றம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற இரண்டு தேர்தல்களில் மக்களினால் அங்கீகரிக்கப்பட்டது. இது ஸ்திரத்தன்மைக்கும் சுபீட்சத்திற்கும் தடையாகவுள்ள ஊழல், மோசடிகள், வீண் விரயம் போன்றவற்றுக்கான மக்களின் எதிர்ப்பை எடுத்துக்காட்டியது. இவைகள் ஸ்திரத்தன்மைக்கும் சுபீட்சத்திற்குமான முக்கிய பொறிமுறைகளான மூலதன உள்வருகையையும் முதலீடுகளையும் தாமதப்படுத்தின” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஜி – 7 அமைப்பானது பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கு ஆசியாவின் நலனை நிலைப்படுத்தத் தேவையான விடயங்களை கண்டறியும் என்ற ஜப்பானின் உத்தியோகபூர்வ அறிவிப்பானது, இலங்கை இந்த மாநாட்டில் கலந்துகொள்வதன் பொருத்தப்பாட்டைக் கோடிட்டுக்காட்டுகின்றது. இந்த அறிவிப்பானது இம்மாநாட்டுக்கு எம்மைத் தெரிவு செய்தமைக்கான ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபேவின் நியாயத்தையும் உறுதிப்படுத்துகின்றது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவரின் உரையின் முழு விவரம் வருமாறு:-
“ஜி – 7 உச்சி மாநாட்டின் எல்லை கடந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு எனக்கு அழைப்பு விடுத்தமைக்காக ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபேவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இது இலங்கைக்குக் கிடைத்த சிறப்பும், கௌரவமுமாகும்.
ஜி – 7 அமைப்பானது பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதற்கு ஆசியாவின் நலனை நிலைப்படுத்தத் தேவையான விடயங்களை கண்டறியும் என்ற ஜப்பானின் உத்தியோகபூர்வ அறிவிப்பானது, இலங்கை இந்த மாநாட்டில் கலந்துகொள்வதன் பொருத்தப்பாட்டைக் கோடிட்டுக் காட்டுகின்றது. இந்த அறிவிப்பானது இம்மாநாட்டுக்கு எம்மைத் தெரிவு செய்தமைக்கான ஜப்பான் பிரதமர் அபேவின் நியாயத்தையும் உறுதிப்படுத்துகின்றது
ஆசியாவில் ஸ்திரத்தன்மையும் பொருளாதார சுபீட்சமும் என்பதே 2016ஆம் ஆண்டு எல்லை கடந்த கூட்டத்தொடரின் கருப்பொருள். சுமார் 30 வருடங்களாக நீடித்த பயங்கரவாதமும் முரண்பாடும் எமது பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.
ஸ்திரத்தன்மையும் சுபீட்சமும் வாய்ப்புகள், அரசியல் மற்றும் அபிவிருத்திச் சூழல் மக்கள் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல், நல்லாட்சி, சுதந்திரத்திற்கான உளவியல் தேவைகள் மற்றும் மோசமான நிலைமமைகளில் இருந்து பாதுகாத்தல் ஆகிய விடயங்களின் மீதே தங்கியுள்ளது.
ஒரு புரட்சிகரமான ஆட்சி மாற்றத்துடன் எனது அரசு பல்லின சமூக சூழலில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும், நிலையான அபிவிருத்தி சூழழுக்குமான வழியை ஏற்படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளது. தற்போது எமது மக்கள் சுதந்தரமாகவும் மனித உரிமைகள் மதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளார்கள். நாங்கள் ஏற்படுத்திய மாற்றத்தை ஜி – 7 நாடுகள் எப்படி பாராட்டின என்பதை நான் அறிவேன். இந்த மாற்றம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற இரண்டு தேர்தல்களில் மக்களினால் அங்கீகரிக்கப்பட்டது. இது ஸ்திரத்தன்மைக்கும் சுபீட்சத்திற்கும் தடையாகவுள்ள ஊழல், மோசடிகள், வீண் விரயம் போன்றவற்றுக்கான மக்களின் எதிர்ப்பை எடுத்துக்காட்டியது. இவைகள் ஸ்திரத்தன்மைக்கும் சுபீட்சத்திற்குமான முக்கிய பொறிமுறைகளான மூலதன உள்வருகையையும் முதலீடுகளையும் தாமதப்படுத்தின.
ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக நாடாளுமன்றத்திலுள்ள நாட்டின் எதிரும் புதிருமாக இருந்த இருபெரும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து எனது தலைமைத்துவத்தின் கீழ் நாம் ஒரு தேசிய ஐக்கிய அரசை அமைத்தோம். எமது அரசு அரசியல் யாப்பில் 19ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்தி அதனூடாக உச்ச நீதிமன்றத்தினால் மறுக்கப்பட்ட அதிகாரங்களை தவிர்ந்த எனது ஏனைய நிறைவேற்று அதிகாரங்கள் பலவற்றை நான் நாடாளுமன்றத்திற்கு கையளித்தேன். இது ஜனநாயகத்தின் சிறந்த நடைமுறையாகும்.
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் சட்ட ஆட்சி என்பவற்றுக்கான எனது அர்ப்பணத்தின் ஒரு வெளிப்பாடாகவும் ஊழலை ஒழித்துக்கட்டும் எனது உறுதிப்பாட்டின் காரணமாகவும் களவாடப்பட்ட அரச சொத்துக்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நான் ஒரு விசேட ஜனாதிபதி செயலணியைத் ஸ்தாபித்ததோடு, ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக ஒரு ஆணைக்குழுவையும் நியமித்துள்ளேன்.
மேலும், பாரிய நிதி மோசடிக் குற்றங்களை விசாரணை செய்வதற்காக பாரிய நிதி மோசடி விசாரணைப்பிரிவை பொலிஸ் திணைக்களத்தில் ஒரு விசேட பிரிவாக அமைத்துள்ளேன்.
ஊழலும் அநீதியும் அரசியல் வன்முறையைத் தோற்றுவிப்பதுடன் முதலீடுகள் பின்வாங்கப்படவும் ஸ்திரமற்ற பொருளாதார சூழல் உருவாவதற்கும் முக்கிய காரணிகளாக அமைகின்றன. எனவே, எமது மேற்கூறிய நடவடிக்கைகள் ஸ்திரத்தன்மையையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தும்.
நிறைவேற்று அதிகாரங்களை கையளிப்பதற்கு மேலதிகமாக பொதுச்சேவைகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, எல்லை மீள்வரைவு மற்றும் நிதி ஆகிய சுதந்திர ஆணைக்குழுக்களை மீளவும் ஸ்தாபித்துள்ளேன்.
நல்லிணக்கம் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக நான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தொடரில் தெரிவித்தவாறு நாம் உண்மையைக் கண்டறிவதற்கும் நீதியை கண்டறிவதற்கும் எல்லா தரப்புகளுடனுமான விரிவான ஆலோசனைகளின் அடிப்படையில் கடந்தகால நிலைமைகள் மீண்டும் ஏற்பாடாதிருப்பதை உறுதி செய்வதற்கான பொறிமுறைகளை அமைத்து வருகின்றோம்.
எமது நாட்டில் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கும் போரின்போது எமது நாட்டுக்கு சமாதானத்தைக் கொண்டுவருவதற்கும் கடந்த சில தசாப்தங்களாக ஜப்பான் எமக்கு வழங்கிவரும் உதவிகளுக்காக ஜப்பான் மக்களுக்கும் ஜப்பான் நாட்டின் அரசுக்கும் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன் இதற்காக ஜப்பான் மக்களுக்கும் அரசுக்கும் நான் முழு மனதுடன் நன்றிகூற விரும்புகின்றேன்.
விரிவான அபிவிருத்தி முயற்சிகளுக்கு எமக்கு நிதி பற்றாக்குறையாக உள்ளது. எனவே, அபிவிருத்தியடைந்த நாடுகளின் பல்தரப்பு மற்றும் இருதரப்பு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
நான் இங்கு இன்று உரையாற்றிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில்கூட வரலாற்றில் என்றுமில்லாதவாறு வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகிய அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்து எமது நாடு மீண்டுவந்துகொண்டிருக்கின்றது. இந்த அனர்த்தம் ஏற்பட்டதும் எமது மீட்புப்பணி மற்றும் புனர்நிர்மாண முயற்சிகளுக்கு உடனடியாக உதவ பல்வேறு நாடுகள் முன்வந்தன. அவர்கள் எல்லோருக்கும் நாம் நன்றிகூறுகின்றோம். இதுவொரு பாரிய அழிவு என்றவகையில் அதிக அபிவிருத்திசார்ந்த உதவிகளை நாம் எதிர்பார்க்கிறோம்.
எனவே, 2016 ஆம் ஆண்டின் இந்த ஜி – 7 உச்சி மாநாடு இந்த எல்லாத் துறைகள்மீதும் கவனம் செலுத்துவதுடன் எம்மைப் போன்ற நாடுகள் விடயத்தில் கவனம் செலுத்துமென நான் நம்புகின்றேன்.
எமது பிரச்சினைகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தப்படும் பட்சத்தில் எனக்கான உங்களது அழைப்பு எல்லைகள் தாண்டிய உண்மையான பயனைக் கொண்டுவர வழி வகுக்கும். இந்தக் கூட்டத் தொடரின்போது ஜி – 7 நாடுகளின் தலைவர்களும் ஜி – 7 எல்லை கடந்த நாடுகளின் தலைவர்களும் வெளிப்படுத்திய நட்புறவு மற்றும் புரிந்துணர்வை நான் பெரிதும் பாராட்டுகின்றேன்.
இறுதியாக எனக்கும் எனது தூதுக்குழுவினருக்கும் வழங்கப்பட்ட சிறப்பான உபசரிப்புகளுக்கு இந்த மாநாட்டின் ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், ஜி – 7 உச்சி மாநாடு முழுமையாக வெற்றிபெற வாழ்த்துகின்றேன்” – என்றார்.