சரித்திர பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத்தினது வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து பதினாறு தினங்கள் உற்சவங்கள் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது. 14 ஆம் திகதி செய்வாய்க்கிழமை 108 சங்குகளால் அம்பாளுக்கு பால் அபிஷேகமும் 15 ஆம் திகதி புதன்கிழமை பகல் சிவபூசையுடன் இரவு திருமஞ்சமும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை பகல் விசேட கருட பூசையும் 18 ஆம் திகதி சனிக்கிழமை இரவு பெரிய சப்பரத்திருவிழாவும் மறுதினமான 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தேர்த்திருவிழாவும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தீர்த்தத் திருவிழாவும் 21 ஆம் திகதி செய்வாய்க்கிழமை மாலை தெற்பத்திருவிழாவுடன் ஆலயத்தினது உற்சவங்கள் யாவும் நிறைவடையும்.
ஆலயத்திருவிழாவில் கலந்து கொள்கின்ற அடியார்களினது தாக சாந்தி மற்றும் பசிப் பிணி ஆகியவற்றினை தீர்ப்பதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் மீது பற்றுள்ள பல அடியார்களும் அமுத சுரபி அன்னதான சபையினரும் ஒழுங்கு செய்து வருகின்றனர். ஆலயத்திருவிழா காலங்களில் நாட்டினது பல இடங்களில் இருந்தும் ஆலயத்திற்கு வருகின்ற அடியார்களினது போக்குவரத்து வசதிகள் யாழ்ப்பாணம் மத்திய பஸ் தரிப்பு இடத்தில் இருந்து குறிகாட்டுவான் இறங்கு துறை வரைக்கும் இலங்கைப் போக்குவரத்து வடபிராந்திய சபையும் தனியார் சிற்றூர்தி சங்கத்தைச் சேர்ந்த சிற்றூர்திகளும் அதிக அளவில் சேவையில் ஈடுபடுவதற்கும் முன்வந்துள்ளனர்.
இதே போன்று குறிகாட்டுவான் இறங்கு துறைக்கும் நயினாதீவு இறங்கு துறைக்குமிடையே சேவையில் ஈடுபடவிருக்கும் மோட்டார் படகினது சேவைகளும் ஆலயத் திருவிழா காலங்களில் வருகின்ற யாத்திரிகர்களினது வருகையினைத் தொடர்ந்து கட்டுப்பாடு இன்றி சேவைகளை மேற்கொள்வதற்கு முன்வந்துள்ளன. இதேபோன்று ஆலயத்தினது திருவிழாவினை யொட்டி சென்ற வருடங்களைப் போல இவ்வருடமும் மின்சார விநியோகத்தினை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபையினர் சம்மதம் தெரிவித்துள்ளதுடன் சுகாதாரத் திணைக்களத்தினரும் ஆலய சுற்றாடலில் புனிதத்தன்மையினை பேணுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குடி தண்ணீர் சேவையினை வேலணை சாட்டியில் இருந்து வேலணை பிரதேச சபையின் ஊடாக தண்ணீர் பவுசர்கள் மூலமாக பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆலயத்தினது திருவிழாக்காலங்களில் ஆலயச் சுற்று சூழல் பகுதிகளில் மதுபாவனை மற்றும் புகைத்தல் மற்றும் பச்சை குத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுமுழுதாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பொலித்தீன் பாவனைகளை வர்த்தகர்களும் ஆலயத்திற்கு சென்று வருகின்ற மக்களும் பாவிப்பதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக கடதாசி (பேப்பர்) யிலான அல்லது ஓலையினால் செய்யப்பட்ட பைகளைப் பாவிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நயினாதீவு இறங்கு துறைமுகத்தில் இருந்து குறிகாட்டுவான் இறங்குதுறை முகத்திற்கு இடையில் சேவையாற்றிவருகின்ற (பாரி) பாதை சேவையினை பழுதடையாத நிலையில் ஆலயத்தினது திருவிழா காலங்களில் இயங்குவதற்கு தயார் நிலையில் வைத்துக் கொள்ளும்படி யாழ். அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் யாழ்ப்பாண அதிகார திணைக்களத்தினது பொறியியலாளரை பணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.