தமிழ் மொழி படங்களைத்தவிர வேறு எந்த மொழிப் படங்களையும் அவ்வளவாக ரசிக்க முடிவதில்லை. மலையாளம், தெலுங்கு, ஹிந்தித் திரைப் படங்கள் வெளியானாலும் அனைத்து படங்களும் வெளியாவதில்லை. முக்கியமான நடிகர்களின் படங்கள்தான் வெளியாகிறது. மற்றபடி இந்தியாவில் உள்ள மற்ற மொழிப் படங்களான மராத்தி, அசாம், கன்னடம், போஜ்புரி, குஜராத்தி, ஒரியா, பெங்காலி உட்பட மற்ற மொழிப் படங்களைப் பற்றி நமக்கு அவ்வளவாகத் தெரியவருவதில்லை.
அந்தக் காலத்தில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக் கிழமை மதியம் தேசிய விருது பெற்ற அனைத்துப் படங்களையும் சப் டைட்டிலுடன் ஒளிபரப்புவார்கள். இப்போதெல்லாம் அப்படி படங்கள் ஒளிபரப்பப்படுகிறதா என்பதும் தெரியவில்லை.
ஆனாலும், கடந்த இரண்டு நாட்களாக அசாம் மொழி நடிகையைப் பற்றி இங்குள்ள அனைவருக்குமே தெரிந்துவிட்டது. அதற்குக் காரணமாக இருந்தவர் அசாம் நடிகையாக இருந்து தற்போது பாஜக எம்எல்ஏவாக ஆகியிருக்கும் அங்குல்லதா தேகா. தற்போது அசாம் எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றிருக்கும் இவரை கடந்த சில நாட்களாக சில மீடியாக்கள் அவர் நடிகையாக இருந்த போது எடுத்த கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு கேலி பேசியிருந்தன.
அதற்கு தற்போது கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பெண்களைக் கேவலப்படுத்தும் செயலை சிலர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் என காங்கிரஸ் தரப்பிலிருந்து கூட சிலர் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.
ராம்கோபால் வர்மா கூட அங்குர்லதா தேகாவின் புகைப்படத்தை பகிர்ந்து ‘நான் முதன் முறையாக அரசியலை விரும்புகிறேன்’ என கமெண்ட் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.