தலைநகர் கொழும்பை மூழ்கடித்துள்ள வெள்ள நீர்மட்டம் குறையாத காரணத்தால் கொழும்பு வெள்ளக்காடாகவே தொடர்ந்தும் காணப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களுக்குள் அடைபட்டு பெரும் அவலத்துடனேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
வெள்ளப்பாதிப்பு இடம்பெற்றுள்ள பிரதேசங்களில் கவலையை ஏற்படுத்தும் வகையில் திருட்டு மற்றும் மோசடிச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும், சுமார் 5 ஆயிரம் பேரளவில் தொற்றுநோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ள நீர்மட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலைவரை 5 அடி உயரத்தில் காணப்பட்டதாகவும், வெள்ள நீர் வெளியேறி நிலைமை ஓரளவு வழமைக்குத் திரும்ப இன்னும் 2 நாள்கள் எடுக்கும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்தது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருள்களை சேகரிக்கின்றோம் எனத் தெரிவித்து அவற்றை சேகரிக்கும் சிலர், பின்னர் அந்தப் பொருட்களை விற்று பணம் பெறும் முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
வெள்ளம் காரணமாக கொழும்பில் கொலன்னாவ, வெல்லம்பிட்டி, மட்டக்குளி, தொட்டலங்க, அப்புத்தளை, ஹங்வெல்ல, மீதெட்டுமுல்ல ஆகிய பகுதிகளும், கம்பஹா மாவட்டத்தில் கடுவெல, பியகம, களனி, வத்தளை ஆகிய பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 33 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேரும், கம்பஹா மாவட்டத்தில் 22 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 88 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மழை காலநிலை ஓரளவுக்கு குறைந்துள்ளபோதும், இடையிடையே மழை பெய்வதால் வெள்ள நீர்மட்டம் குறையாதுள்ளது. இருப்பினும்,நேற்று முன்தினம் 7 அடி அளவில் இருந்த நீர்மட்டம் நேற்று 5 அடியாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளரும், பொறியலாளருமான எஸ்.எஸ்.எல்.வீரசிங்க தெரிவித்தார்.
மழை பெய்யாவிட்டால் இன்னும் இரு தினங்களில் வெள்ள நீர்மட்டம் குறையும் என்றும், ஆனால், நிலைமை முழுமையாக வழமைக்குத் திரும்ப 5 நாட்கள் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்கள் 390 முகாம்களுக்குள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரை அண்டிய பகுதி மக்களுக்குப் பெருமளவான நிவாரணப்பொருள்கள் கிடைக்கின்றபோதும், புறநகர்ப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு நிவாரணங்கள் சரியாகக் கிடைப்பதில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளநீர் வற்றி நிலைமை முழுமையாக வழமைக்குத் திரும்பும்வரை, முகாம்களிலுள்ள மக்கள் தமது வீடுகள் இருக்கும் இடத்தை நோக்கித் திரும்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளப்பாதிப்பு பெரும் அவலத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொழும்பின் பல பாகங்களிலும் உடனுக்குடன் குப்பை அகற்றப்படாமல் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனால், குறித்த பகுதிகளில் பெரும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு, நுளம்புகளின் பெருக்கமும் அதிகரித்துள்ளது.
சீரற்ற காலநிலை தொடர்வதால் கொழும்பில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதுவரை 5 ஆயிரம் பேரளவில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பும் அதனை அண்டிய புறநகர்ப் பகுதியும் வெள்ளக்காடாய் மாறியுள்ளதால், சேத விவரங்களைக் கணிப்பிட முடியாதுள்ளது. பொதுமக்களின் வீடுகள் மற்றும் உடைமைகள், வாகனங்கள் என்பன வெள்ளத்தில் பாதிப்படைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. பொது நிறுவனங்கள், வியாபார ஸ்தாபனங்கள் என்பனவும் பாதிப்படைந்துள்ளன. வெள்ள நீர் வற்றிய பின்னரே முழுமையான சேத விவரத்தை மதிப்பிட முடியும்.
இந்நிலையில், பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் வெள்ளத்தில் நாசமாகியுள்ளதை மதிப்பிடக்கூடியதாக உள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உடைகள் உட்படப் பல பொருட்களை அபகரித்துள்ள சில நபர்கள் அதனை விற்றுப் பணமீட்ட முயல்வதாகவும், குறிப்பாக, போதைப்பொருள் பாவனையாளர்கள் போன்றவர்களே இதனை ச் செய்வதாகவும் களனி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத நிர்மாணங்கள், முறையான கழிவு அகற்றும் திட்டங்களின்மை போன்றவையே கொழும்பு கடந்த 27 வருடங்களில் மிக மோசமான வெள்ளத்தை சந்தித்துள்ளமைக்குக் காரணம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்கள் தாழ்நிலங்களில் கட்டுமானப்பணிகளை முன்னெடுத்துள்ளதுடன், வெள்ளநீர் வடிகால்கள் அடைபட்டுப்போகும் நிலையை உருவாக்கியதும் இந்த நிலைக்குக் காரணம் என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மூடப்பட்டுள்ள அடைப்பட்ட நிலையில் காணப்படும் கால்வாய்கள், நீர் ஆறுகளுக்கும் கடலுக்கும் ஓடுவதைத் தடுக்கின்றன என்றும், இந்த விடயங்களே மிக மோசமான வெள்ளம் ஏற்பட்டமைக்குக் காரணம் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.