பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
பேரிடர் நிவாரணங்கள் குறித்து ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
பேரிடர் தொடர்பில் நான் எவர் மீதும் குற்றம் சுமத்த முடியாது. எனினும் உரிய முறையில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
தலைநகரை அண்டிய பகுதிகளை தூய்மைப்படுத்தி வெள்ளத்தை கட்டுப்படுத்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இந்நடவடிக்கைகள் நின்றுபோனமையே கொழும்பு நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது.
அரசாங்கம் மக்களுக்கு உரிய முறையில் நிவாரணம் வழங்கவில்லை என்ற போதிலும், முடிந்தளவு உதவிகளை வழங்குமாறு கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சில அரச அதிகாரிகள் தங்களுடைய பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றத் தவறியுள்ளனர். அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் அரச அதிகாரிகள் சுயாதீனமாக தீர்மானங்களை எடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது எனவும் மஹிந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.