பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கே முதலிடம்

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கே முதலிடம் வழங்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை அலரி மாளிகையில் வைத்து விஷேட உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார்.

இதன்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் இருந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக 50 படகுகள் வரை இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

கடந்த சில தினங்களாக நாட்டின் பல பாகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அனர்த்தங்கள் சாதாரணமான ஒன்றல்ல என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டுள்ள சகல மக்களுக்கும் உதவி வழங்கும் நடவடிக்கைக்கு பொலிஸார் மற்றும் படையினரை ஈடுபடுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர், அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா உரையாற்றும் போது,

நாட்டின் 22 மாவட்டங்களிலும் 219 பிரதேச வலயங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தேவையான நிதி அரசிடம் இருப்பதாக கூறிய அவர், கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் உணவுத் தேவைக்காக மட்டும் 20 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளதாக கூறினார்.

Related Posts