நாட்டின் வளிமண்டலத்தில் காணப்பட்ட தாழமுக்க நிலை தற்போது நாட்டில் இருந்து விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் மழை வீழ்ச்சி குறைவடைய வாய்ப்புகள் இருப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எனினும் காற்று தொடர்ந்து அதிகரித்து வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கேகாலை – தெஹியோவிட்ட – ஹல்தொட்டை – டெனிஸ்தோட்டம் பகுதியில் மண்சரிவு ஒன்று ஏற்பட்டதில் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மண்சரிவினால் 20 குடும்பங்கள் வரையில் இடம்பெயர்ந்துளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, மொனராகலை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, ரத்தினபுரி, கேகலை மற்றும் குருநாகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, கட்டிட ஆய்வு மற்றும் சுரங்க தொழில் பணிமனைத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, கடும் மழை காரணமாக, மலையக பகுதிகளில் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
குறிப்பாக வாகனங்களின் மின்விளக்குகளை ஒளிரச் செய்தபடி பயணிப்பதால், அனர்த்தகளை குறைத்துக் கொள்ள முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக, மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில், அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில் மொனராகலை, வெஹெரகல நீர்த் தேகத்தின் ஆறு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக மாணிக்க கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெதுருஓயவின் நீர்த் தேக்கத்தின் 7 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், புத்தளம், மஹவ மற்றும் வாரியபொல ஆகிய பகுதிகளில் தாழ்நிலங்களில் வசிக்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பல நீர் நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ள போதும், மஹாவெளி மற்றும் களனி ஆகிய கங்கைகளில் மாத்திரம் வெள்ளம் ஏற்படும் அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் நோர்வுட், நாவலபிட்டி மற்றும் பேராதெனிய ஆகிய பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அசாதாரண காலநிலை காரணமாக ஏற்படுகின்ற அனர்த்தங்கள் தொடர்பில், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொது மக்களிடம் கோரியுள்ளது.
இதன்படி,
0112434251/0113818578
0112445368/0112212230
0112343970/0112343971
ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ள முடியாத நிலை காணப்பட்டால், அருகில் உள்ள காவற்துறை நிலையத்துக்கு அறிவிக்குமாறும் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.