ஈழ அகதி குழந்தை ஒன்றின் புகைகப்படத்தை மோசடியான முறையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்திய பாரதீய ஜனதா கட்சி பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தில் போசாக்கு குறைபாடு காணப்படுவதாகவும், அதற்கு உதாரணமாக கடந்த 2013ஆம் ஆண்டு அவுட்லுக் சஞ்சிகையில் வெளியான புகைப்படம் ஒன்றையும் பாரதீய ஜனதாவின் கட்சியின் தலைவர் அமித் ஷா பொதுக் கூட்டம் ஒன்றின்போது காண்பித்துள்ளார்.
மேலும், அந்த புகைப்படத்தில் காணப்படுவது கேரள மாநிலம் அட்டபாடி (Attapady) பிரதேசத்தைச் சேர்ந்த போசாக்கு குறைப்பாட்டு குழந்தை எனவும் கூறியுள்ளார்.
எனினும் அந்த புகைப்படம் கேரள குழந்தையினுடையது அல்லவெனவும் ஈழ அகதி ஒருவருடைய குழந்தையின் புகைப்படம் எனவும் இந்தியா டொட் கொம் (India.com) செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த புகைப்படமானது கடந்த 2009ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற மோதலின்போது, யுத்த சூன்ய வலயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும், இந்தியன் எக்ஸ்பிரஸ் பக்கம் 64இல் புகைப்படம் குறித்த விளக்கம் காணப்படுவதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ளது.
எனினும் அவுட்லுக் சஞ்சிகை, “அட்டபாடி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் போசாக்கு குறைபாட்டுடனான மூன்று மாத குழந்தை உயிரிழப்பதற்கு முன்பதாக“ எனக் குறிப்பிட்டு தவறாக செய்தி வெளியிட்டுள்ளதாக இந்தியா டொட் கொம் செய்தி வெளியிட்டுள்ளது.