ஐ, நா. சபையின் மனிதவுரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பன வெளியேற்றப்பட்ட பின்னணியில் நவீன உலக ஊடகத்துறை இருளில் வைக்கப்பட்டு, சர்வதேச நாடுகள் பார்த்திருக்க வன்னி மண்ணில் நடத்தப்பட்டஅந்தக் கொடூரம், பின்னர் காணொளிகளகக் கசிய, சனல் 4 போன்ற ஊடகங்களின் வெளியீடுகள் அவற்றை தெளிவாகப் போர்க்குற்றங்களாக நிரூபித்து ஆவணத் தொடர்கள் வெளியிட, ஐ. நா. சபை யுத்ததின் இறுதித் தினங்களில் குறைந்தது 40ஆயிரம் பொதுமக்கள் இறந்ததாக அறிக்கைவிட, வடமாகாணசபை, நடந்தது ஒரு இனப்படுகொலை என்று தீர்மானம் நிறைவேற்ற, இக்கொடூர அழிப்பில் இறந்த எம் மக்களை நினைவு கூரவும், உரிமை மறுக்கப்பட்டு வந்த வேளையில் இவ்வருடம் வடமாகாண சபை மே 18 அன்று முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே நினைவு கூரல் நிகழ்வை வட மாகாணசபை முதல்வர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடத்த சகல ஆயத்தங்களையும் மேற்கொண்டு வருதல் மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.
தமிழர் வரலாற்றில் இத்தினம் என்றும் மறைக்கப்படவோ, மறக்கப்படவோ முடியாதது மட்டுமன்றி இதனைத் தடுக்கும் சகல முனைப்புகளுக்கும் முகம் கொடுக்கும் காலமிது. எனவே, நாம் இவ்வேளையில் மிகவும் நிதானமாக செயற்பட்டு அப்பேற்பட்ட முயற்சிகளை முறியடித்து வரலாற்றில் இந்நாள் வேர் ஊன்றி பதிக்கப்படுதலுக்காக புத்திசாதூரியமாக செயற்படுதல் வேண்டும்.
இவ்வேளையில், வடக்கு மாகாணசபை முதல்வர் தலைமையில் நடைபெறும் நினைவு நாளை நாம் எல்லோரும் அணி திரண்டு பலப்படுத்தி ஒரு திடமான அத்திவாரத்தை போடுவதன் மூலமாக மே 18 என்ற தினம் தமிழர் வரலாற்றில் தீரப்பதிவதோடு நவீன உலகத்திற்கு இது ஒரு முன்மாதிரியான தினமாக இருந்து, இவ்வாறான அவலம் உலகில் எந்த ஒரு இனத்துக்கோ அல்லது மக்களுக்கோ எந்த வேளையிலும் நிகழாமல் இருக்க வழிகோலும் ஒரு ஞாபகார்த்த தினமாகவும் இருக்க வேண்டும்.
இந்த வகையில், நாளை மறுதினம் மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் பலதரப்பாலும் நடத்தப்பட இருக்கும் நினைவு தின நிகழ்வுகளை ஒரு குடையின் கீழ் நின்று, வடக்கு மாகாணசபையின் கௌரவ முதல்வரின் தலைமையில் ஒன்றுகூடி எம் மக்களின் தியாகங்களை வரலாற்றின் வெற்றிப் பக்கங்களாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோமாக. இதற்காக சகல அமைப்புக்களையும் வட மாகாணசபையின், முள்ளிவாய்க்கால் நினைவு தின ஏற்பாட்டுக் குழுவின் நிகழ்வில் பங்கு பற்றி தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
மேலும், வரலாற்றில் பதிந்த இம்மண்ணில், இப்போரின் போது கொல்லப்பட்ட மக்கள் அனைவரதும் பெயர்கள் பதிக்கப்பட்ட ஒரு நிரந்தர நினைவுத் தூபி கொண்ட நினைவு மண்டபத்தை அமைக்க வட மாகாணசபை தனது சகல பலத்தையும் பாவித்து உடனடியாக செயற்படுத்த வேண்டுமென இவ்வேளையில் வேண்டிநிற்கின்றோம்.
இதேவேளையில், தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் உபகுழு தனது தீர்வுத்திட்ட இறுதி வரைபை வெளியிட்டு அது இன்று சர்வதேச நாடுகளிடமும், ஐ. நா. விடமும் கையளிக்கப்பட்டு அவர்களுடனான சந்திப்புக்களில் பேரவையினரால் வலியுறுத்தப்பட்ட இரு முக்கிய விடயங்களில் ஒன்று, தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ் தலைமைகளுக்கு தேர்தல்களில் வழங்கிய ஆணையின் அடிப்படையில் வரையப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தின் அடிப்படையிலான கௌரவமான ஒரு நிரந்தரத் தீர்வின் அவசியத் தேவை.
இரண்டாவது, இறுதிப் போரின் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலும் அதற்கான சர்வதேச விசாரணையின் அவசியமும்.
இந்தவகையில், தமிழ் மக்கள் பேரவையின ;உபகுழுக்களில் ஒன்றான பொறுப்புக் கூறலுக்கான சர்வதேச விசாரணைக்கான உபகுழு, முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18 இல் எம்மக்களின் தியாகங்களின் மேல் தலை வணங்கி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகின்றது என்பதுடன், இவ் உபகுழுவினதும், இதில் இணைந்து பங்காற்ற இருக்கும் சர்வதேச சட்ட நிபுணர்களின் பெயர்களும் வெகுவிரைவில் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டு, பேரவை தனது அடுத்த மிக முக்கிய செயற்திட்டத்தில் இறங்குகின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறு தமிழ் மக்கள் பேரவை வெளியீட்டுள்ள ஊடக அறிகை்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.