Ad Widget

அரசு தவறினால் தீர்வை வென்றிட தமிழ் மக்கள் போராட்டம் நடாத்துவார்கள்

தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அரசாங்கத்துக்கும் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பது தெரிந்திருக்க வேண்டும். அத்தகைய அரசியல் தீர்வைக் கொண்டு வர அவர்கள் முன்வரத் தவறினால் தமக்கான அரசியல் தீர்வு என்ன என்பதை தமிழ் மக்களே தீர்மானித்து அதை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டத்தை ஆரம்பிப்பார்கள். இவ்வாறு மறைந்த ரெலோ தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் போராளிகளின் முப்பதாவது நினைவஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றிய ரெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

srianna-sri-kanthaa

கடந்த ஞாயிற்றுக் கிழமை நல்லூர் இளங் கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமை வகித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில் ஸ்ரீகாந்தா தெரிவித்ததாவது,

இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் தனியே ரெலோ இயக்கத்தவரையும் போராளிகளையும் மாத்திரம் நினைத்துப் பார்க்கவில்லை. எமது மக்களின் விருத்திக்காக தம் உயிர்களை அர்ப்பணித்த தலைவர்கள், போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூறுகின்றோம்.

மறைந்த தலைவர் அமிர்தலிங்கம் முதல் தேசியத்தலைவர் என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரபாகரன் வரையில் தமிழினத்தின் விடுதலைக்காக போராடிய சகல தலைவர்களையும் இளைஞர்களையும் பொதுமக்களையும் நினைந்து அஞ்சலி செலுத்துகிறோம். உயிர்த்தியாகம் செய்தவர்களை எம்மினம் மறந்தாலும் எமக்கு வாழ்வில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களில் பெரும்பான்மையோரின் ஆதரவு மகிந்த ராஜபக்சவுக்கே கிடைத்தது. தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் அளித்த அமோக ஆதரவினால் மட்டுமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற முடிந்தது. இலங்கையர்களில் பெரும்பான்மையோரின் ஆதரவை அவர் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் எமது மக்கள் பறிகொடுத்த காணிகளை மீளப்பெறவும் தமிழினத்தின் தாயகத்திலிருந்து இராணுவத்தை படிப்படியாக வாபஸ் பெறவும் எமது மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடவேண்டிய அவசியம் கிடையாது. ஜனாதிபதியும் அரசாங்கமும் இதனைச் செய்தாக வேண்டும்.

அரசியல் தீர்வு விடயத்தை பொறுத்த மட்டில் எமது, மக்கள் தமது மரபு வழிப் பிரதேசமான வடகிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி கோருகின்றனர். இந்த சுயாட்சி இணைப்பாட்சி முறையொன்று அமைக்கப்படும் சமஷ்டி ஆட்சி அமைப்பாக இருக்கவேண்டும் என்றும் விரும்புகின்றனர்.

எமது மக்கள் கோரி நிற்கும் சுயாட்சியை எத்தகைய முறையில் வழங்கவேண்டும் என்பது இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளையும் உள்ளடக்கிய கலப்பு அரசாங்கத்தின் பொறுப்பு ஆகும். சமஷ்டி ஆட்சி பற்றி இத்தனை காலத்துக்குப் பிறகு சிங்கள அரசியல் தலைவர்களுக்கும் கட்சிகளுக்கும் நாம் அரசியல் வகுப்புகள் நடத்த முடியாது. எமது மக்கள் இன்று மௌனமாக உள்ளனர். மிக நீண்டகால யுத்தம் ஒன்றினால் ஏற்பட்ட இழப்புக்களையும் துன்ப துயரங்களையும் சுமந்து நிற்கின்றனர்.

சுதந்திரம் எமது பிறப்புரிமை என்று மௌனமாக எம் மக்கள் சொல்கிறார்கள். சுயாட்சியை அவர்கள் மௌனமாகக் கோருகிறார்கள். ஒரே நாட்டிற்குள் சுயாட்சி அடிப்படையில் அரசியல் தீர்வு ஒன்று இன்னும் சிலகாலத்தில் சாத்தியமில்லை என்றால் சுதந்திரம் எமது பிறப்புரிமை என்ற அடிப்படையில் அரசியல் போராட்டமொன்றை ஆரம்பிப்பதை தவிர வேறு வழி எமக்கு இல்லை.

1977 இல் 18 பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டபோது எமது மக்கள் மத்தியில் ஆரவார வரவேற்பு இருந்தது. நாடு ஒன்றின் தேசிய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயர்பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தலைவராக அமிர்தலிங்கம் இருந்தார்.

ஆனால் சமீபத்தில் எமது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டபோது எமது மக்கள் பெரிதாகச் சிந்திக்கவில்லை. கடந்த காலங்களில் அகிம்சைப் போராட்டங்களை எதையும் பெரிதாக அறிவிக்கவில்லை. சிங்களத் தலைவர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டன. பின்னர் சிங்களத் தலைவர்களால் அவை கிழித்தெறியப்பட்டன.

சட்டரீதியாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மட்டுமே 1980 இல் அன்றைய தமிழ் அரசியல் தலைமையால் சாதிக்க முடிந்தது. ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக இருந்தபோது கொண்டுவந்த மாவட்ட அபிருத்திச் சபைகளை ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே தலைவர் அமிர்தலிங்கம் பெற்றிருந்த அரசியல் ஆதரவின் அடித்தளமே நொறுங்கியது. அரசியல் சாசன ரீதியாக தமிழ் மக்களுக்கென இப்போது இருப்பது மாகாணசபைகள் மட்டுமே. இந்த மாகாண சபைகள் திட்டம்கூட போராட்டத்தினாலேயே சாதிக்கப்பட்டது. இதில் சகல தமிழர் போராட்ட அமைப்புகளுக்கும் பங்குண்டு.

அரசியல் தீர்வு விடயத்தில் அவரையும் இவரையும் சரிக்கட்டி ஓர் அரைகுறைத் தீர்வை திணிக்க முடியும் என்று எவராவது கணக்குப் போட்டால் அது பகற்கனவாகவே முடியும். தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியாக தமது அரசியல் தலைமையை மாற்றிய வரலாற்றுக்கு உரியவர்கள். அரசியல் அரங்கில் அதிபார வீரர்களாகத் திகழ்ந்தவர்களைக் கூட பல சந்தர்ப்பங்களில் அவர்கள் தூக்கி எறிந்திருக்கிறார்கள்.

இன்று தமிழ்த் தேசியவாத சக்திகளில் பெரும்பாலனவை கூட்டமைப்புக்குள் உள்ளடங்கியுள்ளன. எஞ்சியவை வெளியே உள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் தீர்வு விடயத்தில் கரிசனை கொண்டுள்ளார் என்பது அவரது பேச்சுக்களில் தெரிகிறது. ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்ட கலப்பு அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் கேள்விகள் எழுந்திருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் எமது தாயகத்துக்கு சுயாட்சியை வழங்க இன்னும் சிறிது காலத்துக்குள் ஜனாதிபதியும் அரசாங்கமும் முன்வரவில்லை என்றால் சுதந்திரம் எமது பிறப்புரிமை என்ற அடிப்படையில் அரசியல் தீர்வொன்றினை வென்றேடுத்திட ஓர் அரசியல் போராட்டத்தினை ஆரம்பிக்க வேண்டியிருக்கும். தமிழ்த் தேசியவாத சக்திகளைப் பொறுத்தமட்டில் ஓர் புதிய மீள் இணைவுகூட ஏற்படலாம்.

ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கு எமது மக்கள் மத்தியில் இனிமேல் இடமில்லை. ஆயுதப்போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட அழிவுகளையும் அவலங்களையும் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசியல் போராட்டம் ஒன்றை எமது மக்களால் நடாத்த முடியும். அதனூடாக எம்மினத்தின் விடுதலையை சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

Related Posts