இங்கிலாந்து அணிக்கெதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்தில் இலங்கை விளையாடவுள்ள நிலையில், இத்தொடரின் முதலாவது டெஸ்டுக்கான இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள குழாமில், இவ்வருட பருவகாலத்தின் ஆரம்பத்தில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய வேகப்பந்துவீச்சாளர் ஜேக் போல் முதற்தடவையாக இங்கிலாந்துக் குழாமில் இடம்பிடித்ததோடு, இதுவரையில் இங்கிலாந்து சார்பாக இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே விளையாடிய துடுப்பாட்டா வீரர் ஜேம்ஸ் வின்ஸ், முதற்தடவையாக டெஸ்ட் குழாமில் இடம்பிடித்துள்ளார். இவர், இருதய நோய் காரணமாக ஓய்வு பெற்ற ஜேம்ஸ் டெய்லரின் ஐந்தாம் இடத்தில் துடுப்பெடுத்தாடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற இங்கிலாந்தின் இறுதி டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயற்பட்டிருக்காத ஆரம்பத் துடுப்பாட்டவீரர் அலெக்ஸ் ஹேல்ஸுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, அத்தோடரின் பிற்பகுதியில் மோசமாக செயற்பட்டிருந்த மூன்றாமிலக்க துடுப்பாட்டவேறார் நிக் கொம்ப்டனுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அறிவிக்கப்பட்ட குழாமில், அண்மையில் அணியிலிருந்து நீக்கப்பட்ட இங்கிலாந்தின் சிரேஷ்ட வீரர் இயன் பெல்லுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லையென்பதோடு தென்னாபிரிக்கவுக்கெதிரான குழாமில் இடம்பெற்றிருந்த துடுப்பாட்டவீரர் கரி பலன்ஸூக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டவில்லையென்பதோடு, இங்கிலாந்தின் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸுக்கும் குழாமில் இடம்கிடைக்கவில்லை. தவிர, காயம் காரணமாக மார்க் வூட், மார்க் பூட்டிட் ஆகியோரும் குழாமில் இடம்பிடிக்கவில்லை.
குழாம் – அலிஸ்டியர் குக் (தலைவர்), மொயின் அலி, ஜேம்ஸ் அன்டர்சன், ஜொனி பெயார்ஸ்டோ, ஜேக் போல்ம ஸ்டூவர்ட் புரோட், நிக் கொம்ப்டன், ஸ்டீவன் பின், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ்