ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் காட்டுக் குதிரைக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் இல்லை. ஜனநாயகத்தின் 4ஆவது தூணாகிய ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும். பிழையான, பொய்யான செய்திகளை வெளியிடக்கூடாது’ என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்று புதன்கிழமை (11) எச்சரிக்கை செய்தார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கூறுகையில்,
‘யாழ்ப்பாணத்திலுள்ள நீதவான் ஒருவரது வீடு மீது கல்வீச்சுத் தாக்குதல் நடைபெற்றதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியொன்று வெளியாகியிருந்தது. இது தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள 8 நீதவான்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வினாவியபோது, அவ்வாறு நடைபெறவில்லையென கூறினர். இவ்வாறு ஆதாரமற்ற பொய்யான செய்திகளை வெளியிடக்கூடாது.
நான் தெரிவிக்காத விடயங்களையும் நான் கூறியதாக செய்திகள் பிரசுரித்துள்ளனர். நீதிமன்ற தீர்ப்புக்களை விமர்சனத்துக்கு உள்ளாக்கிய வகையில் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. நீதவான், நீதிபதி, நீதியரசர் ஆகியோருக்கிடையிலான வேறுபாடுகளை ஊடகங்கள் சரியாக செய்திகளில் குறிப்பிடவேண்டும்.
தலைப்புக்களை பரபரப்புக்காக பத்திரிகைகள் போடுகின்றன. அவை மக்கள் மத்தியில் அச்ச உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான செய்திகள் வெளியாகும் போது, பாதிக்கப்பட்டவர்களின் பெயர், விவரங்களை வெளியிடக்கூடாது. வெளிநாடுகளில் நீதிமன்றங்களில் கூட குறியீடுகள் பயன்படுத்துவர். இங்கு அப்படியொரு நடைமுறையில்லை. பெயர்கள் போடுவதால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகம் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றார்கள்’ என்றார்.