ஹம்பாந்தோட்டையில் 100 தொழிற்சாலைகள் அமைக்க சீனாவுக்கு அனுமதி!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.5 பில்லியன் கடனைப் பெற்றுக்கொள்ள தான் எதிர்பார்ப்பதாக விசேட செயற்றிட்டங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

உலக வங்கியிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலரும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலரும் சிறீலங்காவுக்குக் கிடைத்துள்ளன.

இதன்படி சிறீலுங்காவுக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாகவும், இதைவைத்து நாம் நல்ல நிலைக்கு வரமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தமக்குக் கிடைத்துள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டில் சிறீலங்காவின் பொருளாதார நிலை வலுவான நிலைக்கு வருமென நாம் நம்புகின்றோம். சிறீலங்காவில் உற்பத்தி செய்யப்படுகின்ற தேயிலை, இறப்பர் போன்றவற்றின் கேள்வி சர்வதேசச் சந்தையில் தற்போது குறைந்துள்ளமையால் சிறீலங்கா வேறொரு திசைக்கு நகரவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதன்படி, சுற்றுலாத்துறை, தொழில்நுட்பம், நிதிசார் துறைகள், கட்டட நிர்மாணப் பணிகள் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

மேலும், கொழும்பு துறைமுக நகரத் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒரு மத்திய நிலையமாக மாற்றுவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டையில் சீனாவின் 100 தொழிற்சாலைகள் அமைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதைவிட ,சிறீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனம் 70 ஆயிரம் அமெரிக்க டொலர் நிதியை நாளொன்றுக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அவர் இதனால் முதலீடுகளை அதிகரித்து பொருளாதாரத்தை வலுப்பெற செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts