வெள்ளைவான் கடத்தல், கைது போன்றவற்றை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

வடக்கு கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வெள்ளைவான் கடத்தல் மற்றும் கைது போன்ற நடவடிக்கைகளை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

கொழும்பு புறக்கோட்டையில் உள்ள அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஆரம்பமாகிய பேரணி கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் கிளை வரை சென்றது.

அதன்பின்னர் ஐ.நா அலுவலகம் முன்பாக அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, பின்னர் மகஜர் ஒன்றும் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

காணாமல் போவோரை கண்டறியும் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இருந்தும் கொழும்புக்குச் சென்று பெரும்திரளானோர் கலந்துகொண்டனர்.

நல்லாட்சி அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இராணுவ நிர்வாகத்தை நடத்துவதாகவும் இராணுவத்திற்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சுமத்தினர்.

அத்துடன், இரகசிய முகாம்களை மூடு என்று எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் கைகளில் ஏந்தியவாறு கோசம் எழுப்பினர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட தமது பிள்ளைகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தும் மகஜர் ஒன்றை அமைச்சர் மனோகணேசனிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, ஐக்கிய சோசலிச முன்னணியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Posts