வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்களில் இடம்பெற்றுள்ளவர்கள் பற்றிய மற்றொரு தொகுதி பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் நெருங்கிய சகாவான நிசங்க சேனாதிபதியின் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது.
பனாமா ஆவணங்களின் மற்றொரு தொகுதி நேற்று வெளியானது. இதில் சிறிலங்காவைச் சேர்ந்த, நிறுவனங்கள், தனிநபர்களின் பெயர் விபரங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில், யாப்பா ஹெற்றி பத்திரணஹலாகே நிசங்க யாப்பா சேனாதிபதி என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது.
இவரே அவன்ட் கார்டே பாதுகாப்புச் சேவை நிறுவனத்தின் தலைவரான மேஜர் நிசங்க சேனாதிபதி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத்தின் முதலாவது கொமாண்டோப் படைப்பிரிவில் பணியாற்றிய இவர், பின்னர், கோத்தாபய ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட அவன்ட் கார்டே பாதுகாப்புச் சேவை நிறுவனத்தின் தலைவராக பணியாற்றினார்.
வெளிநாட்டுக் கப்பல்களின் பாதுகாப்புக்கு ஆயுதங்களை வழங்கும் சேவையை மேற்கொண்டு பெருமளவில் வருமானம் ஈ்ட்டியிருந்தது இவரது நிறுவனம்.
கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான இவருக்கு எதிராக தற்போது, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் ஆதிபர் ஆணைக்குழு என்பவற்றினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.