பல்கலைக்கழகங்களுக்குள் பகிடிவதை சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அந்த சட்டத்தை மீற எவருக்கும் இடமில்லை எனவும், உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அல்ல ஒன்றிரண்டில் பகிடிவதை தொடர்பில் தகவல் பதிவாகியுள்ளது. உலகில் எங்கும் இதுபோன்ற பகிடிவதைகள் இல்லை, ஏனைய நாடுகளில் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் வரும் போது சிரேஷ்ட மாணவர்கள் அவர்களை அன்புடன் வரவேற்பர், ஆனால் எமது நாட்டில் மட்டுமே இவ்வாறு உள்ளது.
நாம் எமது சிங்களம் மற்றும் பௌத்தம் குறித்து பெரிதாக பேசுகின்றோம். ஆனால் எமது மாணவர்கள் புதிதாக பல்கலைக்கழகங்களுக்கு வருபவர்களை சித்திரைவதை செய்கின்றனர். சில மாணவர்கள் உளவியல் நோயாளர்கள் போல் நடந்து கொள்கின்றனர். எனவே தான் இவ்வாறு செய்கின்றனர்.
இன்று ஒன்றிரண்டு பல்கலைக்கழகங்களிலுள்ள பகிடிவதைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
பல்கலைக்கழகங்களை நிர்வகிப்பது அரசாங்கம் அல்ல, உபவேந்தர்கள் மற்றும் நிர்வாக சபையினரே. அவர்களுக்கு தற்போது கைகழுவ முடியில்லை. அதேபோல் பகிடிவதை நாட்டில் சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது எனவும், பாராளுமன்ற சட்டமூலத்தின் படி அது நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே சட்டத்தை மீற யாருக்கும் இடமளிக்க முடியாது. ஏனெனில் தற்போது நடைபெறுவது நல்லாட்சி, எமக்கு பழைய அரசாங்கத்தைப் போல் அநீதியான முறையில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.” என்றார்.