இலங்கை அணியின் பந்துவீச்சு, உலகில் மிகச்சிறந்த பந்துவீச்சு அணிகளுள் ஒன்று எனத் தெரிவித்துள்ள இலங்கை அணியின் பிரதம தேர்வாளர் சனத் ஜெயசூரிய, இலங்கை அணியின் துடுப்பாட்டத்தையே, பிரச்சினைக்குரிய பகுதியாக இனங்கண்டுள்ளார். மே முதலாம் திகதி முதல் தனது பதவியை ஏற்றுள்ள சனத் ஜெயசூரிய, ஆரம்பிக்கவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
‘நாங்கள் சிறப்பாகவுள்ள ஒரு பிரிவென்றால், அது பந்துவீச்சுத் தான். உலகில் சிறந்த பந்துவீச்சு அணியை நாம் கொண்டுள்ளாம். அனுபவம் மிகுந்ததும் மிகச்சிறந்ததுமாகவும் உள்ளதான வேகப்பந்து வீச்சாளர்கள் ஐவரையும் சுழற்பந்து வீச்சாளர்களையும் நாம் கொண்டிருக்கிறோம்” என்றார்.
‘நாங்கள் பின்தங்கியிருக்கிற ஒரு விடயமென்னவெனில், அது எங்கள் துடுப்பாட்டம். அங்கு தான் நீங்கள் கொஞ்ச காலம் கொடுக்க வேண்டும். துடுப்பாட்ட வீரர்களை இரவோடிரவாகக் கண்டுபிடிக்க முடியாது. அவர்களுடன் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அதன் காரணமாகத் தான் திரிமான்னவுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளோம். அவரால் பெறுபேறுகளை வெளிப்படுத்த முடியுமென்பது எமக்குத் தெரியும்” என்றார்.
இலங்கை அணிக்கு வீரர்களைத் தெரிவுசெய்யும்போது, தேர்வில் தொடர்ச்சியொன்று இருக்க வேண்டுமெனத் தெரிவித்த சனத் ஜெயசூரிய, இலங்கையின் கிரிக்கெட்டின் எதிர்காலமெனக் கருதும் வீரர்களையே, இங்கிலாந்துத் தொடருக்காகத் தெரிவுசெய்துள்ளதாகத் தெரிவித்தார்.
அத்தோடு, தெரிவுசெய்யப்பட்டுள்ள குழாமை, மிகவும் திறமையான குழாமென வர்ணித்த சனத் ஜெயசூரிய, இலங்கை ‘ஏ” அணி, அபிவிருத்திக் குழாம்கள் ஆகியவற்றில், அவர்கள் நீண்டகாலமாக விளையாடியவர்கள் எனவும் தெரிவித்ததோடு, அவர்களின் திறமையை மெருகேற்ற வேண்டுமெனத் தெரிவித்தார்.