இங்கிலாந்தில் சங்கக்காரா, ஜெயவர்த்தனேவின் ஆலோசனைகள் இலங்கை அணிக்கு பெரிதும் உதவியாக இருக்கப் போவதாக அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.
இலங்கை அணியின் இரு தூண்களாக இருந்த சங்கக்காரா, ஜெயவர்த்தனே இருவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இதன் பிறகு அந்த அணி தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.
சங்கக்காராவும், ஜெயவர்த்தனேவும் இங்கிலாந்தில் கவுண்டிப் போட்டிகளில் ஆடி வருவதால் அங்குள்ள சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர்கள். தவிர, அவர்களில் அனுபவ ஆலோசனைகளும் தங்களுக்கு உதவுப் போவதாக மேத்யூஸ் கூறியுள்ளார்.
இந்த தொடர் பற்றி இலங்கை அணியின் தலைவர் மேத்யூஸ் கூறுகையில், சர்வதேச போட்டிகள் என்று வந்துவிட்டால் ரகசியம் என்று ஏதும் இருக்காது.
இங்கிலாந்து அணி தொடர்பாக எங்களிடம் வீடியோ உள்ளது. அதேபோல் எங்கள் வீரர்களின் செயல்பாடு குறித்து அவர்களிடம் வீடியோ இருக்கும். ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக 2 தந்திரங்களை ஜெயவர்த்தனே வைத்துள்ளார்.
ஜெயவர்த்தனே, சங்கக்காரா இருவரும் இலங்கை அணிக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவர்கள் தற்போது அணியில் இல்லை என்றாலும், பயமில்லாத சில வீரர்கள் அணியில் இருப்பது எங்களுக்கு பலம்.
மேலும், 2014ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை நாங்கள் கைப்பற்றினோம். அதற்குமுன்பு நாங்கள் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை. அதுபோன்று இந்தமுறை நடந்தால் வரலாற்று அடையாளமாக அமையும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.