Ad Widget

கொக்கிளாய் விகாரை; காணி உரிமை சர்ச்சையால் நிறுத்த முடியாத நிலை

முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதேசத்தில் படையினரின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டு வரும் புதிய விகாரை அமைக்கும் பணிகளை நிறுத்துவதற்கு காணி உரிமைப் பத்திரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தடையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தந்தையின் பெயரில் காணி உரிமைக்கான அனுமதிப்பத்திரம் உள்ளதால் தனது காணியையும் உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டு வரும் விகாரையின் நிர்மாணப்பணிகளை சட்டத்தின் மூலமும் நிறுத்த முடியவில்லையென காணியின் தற்போதைய உரிமையாளர் செய்தி ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்தார்.

புதிய விகாரை அமைக்கும் செயற்பாடு தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தந்தையின் பெயரில் இருக்கும் காணி உரிமைக்கான அனுமதிப்பத்திரத்தை தனது பெயரில் மாற்றி வருமாறு தனக்கு சட்டத்தரணிகளால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் பெயர் மாற்றுவதற்கு விண்ணப்பித்துள்ளபோதும் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

எனினும் விகாரையின் கட்டுமான பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இந்த விடயம் தொடர்பில் தான் தெரியப்படுத்தியுள்ளதாகவும், எனினும் விகாரரை கட்டும் பணி இராணுவத்தின் உதவியுடன் தொடர்ந்தும் இடம்பெறுவது வருத்தமளிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.

இதுமாத்திரமன்றி வடமாகாண முதலமைச்சர் விகாரையின் கட்டுமானப் பணிகளை உடன் நிறுத்துமாறு வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை இம் மாதம் அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நிலையில் மக்களின் காணிகளில் இராணுவத்தின் அனுசரணையுடன் விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts