சுவாமிநாதன், கூட்டமைப்பு எம்.பிக்கள் சொற்போர்!!

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்குமிடையிலான சொற்போர் உக்கிரமடையத் தொடங்கியுள்ளது.

மாதிரி வீடு அமைக்கப்பட்டது முதலே இந்த முறுகல்நிலை இருந்து வருகின்றது.

குறித்த வீடமைப்புத் திட்டத்துக்கு முட்டுக்கட்டைகள் இடம்பெறுகின்றன. இருந்தாலும் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் சுவாமிநாதன் நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் நேற்றுக் கருத்து வெளியிட்டார்.

“வடக்கு, கிழக்குக்கு பொருத்தமற்ற 65 ஆயிரம் பொருத்து வீட்டுத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தால் எமது மக்களுக்கு எவ்வித நம்மையும் கிடைக்கப்போவதில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்தத் திட்டத்தின் பிரகாரம், வீடொன்றுக்கு 21 இலட்சம் ரூபா செலவிடப்படுகின்றது. இந்தப் பணம் இருந்தால் இரண்டு வீடுகளை அமைத்துவிடமுடியும்.

அத்துடன், வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தான்தோன்றித்தனமாக குறிப்பிட்டுள்ளார்.

இது அமைச்சரின் நிலைப்பாடா அல்லது அவரின் கட்சித் தலைவரின் நிலைப்பாடா என்று தெரியவில்லை. எனினும், இந்த வீட்டுத் திட்டத்தால் மக்களைவிட இவர்களுக்குதான் நம்மை இருக்கப்போகின்றது.

பொருத்து வீடுகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கவில்லை. தமக்கு வீடு வேண்டும் என்பதற்காகவே விண்ணப்பிக்றனர்” – என்று கூறினார்.

அதேவேளை, கூட்டமைப்பின் ஏனைய எம்.பிக்களும் பொருத்து வீட்டுத் திட்டத்தை விமர்சித்து வருகின்றனர். இதற்கு அமைச்சரும் பதிலடி கொடுப்பதால் சொற்போர் தற்போது உக்கிரமடைந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

Related Posts