யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபாரிகளுக்கான நீர் விநியோகம் சீராக இடம்பெறாமை, மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை , சந்தையிலுள்ள மலசலகூடங்கள் சுத்தமற்றுக் காணப்படுகின்றமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு பெற்றுத் தருமாறு வலியுறுத்தி வியாபாரிகள் தமது இட வாடகையை வழங்க எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04-05-2016) காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேற்படி கோரிக்கைகள் ஏற்கனவே பல தடவைகள் முன்வைக்கப்பட்ட போதும் பலனிக்காத நிலையிலேயே சந்தை வியாபாரிகள் அனைவரும் இட வாடகையை வழங்க முடியாது எனக் கோரி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன் போது அங்கு வருகை தந்த நல்லூர் பிரதேச சபையின் பிரதம வரி அறவீட்டாளர் நீங்கள் வரி செலுத்தத் தவறினால் உங்களுக்குச் சந்தையில் விற்பனை செய்வதற்கு இடமில்லாமல் போகுமெனவும், அனைத்து வியாபாரிகளும் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டி வருமெனவும் கடும் தொனியில் எச்சரித்துள்ளார். இதனையடுத்து வரி அறவீட்டாளருக்கும் , சந்தை வியாபாரிகளுக்குமிடையே கடும் வாக்கு வாதம் இடம்பெற்றது. சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக வியாபாரிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிய வருகிறது.
சந்தையில் பிரதேச சபையால் நீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படாமையால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சந்தையிலுள்ள சில வியாபாரிகள் சந்தைக்கு அண்மையிலுள்ள உணவகங்களில் தான் குடிநீரைப் பெற வேண்டியுள்ளதாகவும் தெரிவித்த வியாபாரிகள் சந்தையிலுள்ள அனைத்து வியாபாரிகளும் இவ்வாறு நீரைப் பெற முடியாதெனவும் கவலை வெளியிட்டனர். கடும் வெப்ப காலநிலை நிலவும் இந்தக் காலகட்டத்தில் நீர் வசதியின்றித் தாம் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் மின்சார வசதிகள் உரிய முறையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக இலத்திரனியல் தராசினை உபயோகிக்க முடியாதுள்ளது.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனியாக அமைக்கப்பட்ட மலசலகூடங்கள் உரிய பராமரிப்பின்றி மோசமான நிலையில் காணப்படுவதால் நாமும் , மரக்கறிகள் கொள்வனவு செய்யவரும் நுகர்வோரும் பெரும் சுகாதார ரீதியான நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றோம். மலசலகூட கூடக் கதவொன்றின் கதவு உடைந்து காணப்படுவதால் அதனைப் பயன்படுத்த முடியாதுள்ளதாகவும் , மலசலகூடங்கள் சுத்தமின்றிக் காணப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கின்றனர் .
நாளாந்தம் இட வாடகை வழங்கி வரும் நாங்கள் குடிநீர் வசதி, மின்சார வசதி , மலசல கூடம் சுத்தம் செய்யப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தமை குற்றமா ? எனக் கேள்வியெழுப்பும் சந்தை வியாபாரிகள் எமது கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த எம்மை நல்லூர் பிரதேச சபையின் பிரதம வரி அறவீட்டாளர் கடுமையாக எச்சரிக்கும் வகையில் செயற்பட்டமை எந்த வகையில் நியாயம்? என வியாபாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை,வியாபாரிகளின் எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்துச் சந்தையின் வியாபார சங்க நிர்வாகிகளை நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் பிரதேச சபைக்கு அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
நேற்றுச் சந்தை வியாபாரிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் கடந்த பத்து வருட காலமாகச் சிரமத்தின் மத்தியில் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரி ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நான் இந்தச் சந்தையில் கடந்த பத்து வருட காலமாக வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறேன் . எங்களுக்குக் குடிநீர் வசதி இதுவரை ஏற்படுத்தித் தரப்படவில்லை. சந்தையிலுள்ள வியாபாரிகள் அனைவரும் இலத்திரனியல் தராசினைப் பயன்படுத்துவதற்கு வசதியாக பிளக் போட்டுத் தருவதாகக் கடந்த மூன்று மாத காலமாக ஏமாற்றுகிறார்கள். மேல் மாடி கட்ப்பட்டு எங்களை மேல வியாபாரம் செய்வதற்கு அனுப்பும் போது கீழே எந்தவொரு வியாபாரமும் செய்ய விடமாட்டோம் என்றார்கள். ஆனால், தற்போது கீழே வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
நாங்கள் இன்று இட வாடகை கொடுக்காமல் நிறுத்தினதற்கு உடனே சந்தையைக் குத்தகைக்கு எடுத்தவர்களுக்கு இட வாடகையைக் கொடுக்காவிட்டால் கோட்ஸ் இற்குப் போக வேண்டி வரும் என்று வெருட்டியினம் . நாங்கள் நானூறு வியாபாரிகளும் இருக்கிறதால தான் இந்தச் சந்தை இயங்குகிறது. நாங்களனைவரும் சேர்ந்து விடுத்த கோரிக்கையை ஏற்காத பிரதேச சபை தனிநபரான சந்தையைக் குத்தகைக்கு எடுத்த தரகரின் கோரிக்கையை ஏற்று எம்முடன் வந்து முரண்படுகிறார்கள். சந்தையைக் குத்தகைக்கு எடுத்தவர் முக்கியமா? அல்லது நாங்கள் நானூறு வியாபாரிகளும் முக்கியமா?
தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் சக வியாபாரிகள் மயங்கி விழுகிறார்கள். நெடுகளும் நாங்கள் தேத்தண்ணிக் கடையில் போய்த் தண்ணீர் கேட்கேலாது . நானூறு வியாபாரிகளும் தேத்தண்ணிக் கடையில் போய்த் தண்ணி கேட்டால் அவர்கள் கொடுப்பார்களா? நாங்கள் பல தடவைகள் நீர் வசதி ஏற்படுத்தித் தருமாறு பிரதேச சபையிடம் கேட்டபோதும் அவர்கள் நீர் வசதியை இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை.
சந்தை வியாபாரிகளும் , பொதுமக்களும் பாவிக்கிற மலசலகூடத்தை நீங்களே போய்ப் பார்த்தால் தான் தெரியும். எந்தவொரு துப்பரவுமில்லை.
இவ்வாறான கோரிக்கைகளுக்குத் தீர்வு பெற்றுத் தருமாறே நாங்கள் கேட்டோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத பிரதேச சபையினர் இடவாடகை கொடுக்காத காரணத்துக்காக எம்முடன் முரண்படுவது எந்த வகையில் நியாயம்? நானூறு பேரையும் எதிர்த்துக் கொண்டு பக்கச் சார்பாகச் செயற்படுகின்றனர். நாங்கள் இடவாடகையை முற்றுமுழுதாகக் கொடுக்க மாட்டோம் எனச் சொல்லவில்லை. எங்கள் கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றினால் இட வாடகையைக் கொடுப்போம் என்று சொன்ன போதும் சந்தையைக் குத்தகைக்கு எடுத்தோரும், பிரதேச சபையினரும் அதற்கு உடன்படவில்லை. இதன் காரணமாகத் தான் நாங்கள் இன்று(நேற்று) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.